விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் விசாரணையின்போது சட்ட உதவியை மைக்கேல் தவறாக பயன்படுத்துகிறார்: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார்

புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பான விசாரணையின்போது, தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் வக்கீலுக்கு துண்டு சீட்டு அனுப்பி பதில் கேட்கிறார்’’ என நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. விவிஐபி ஹெலிகாப்டர் கொள்முதலில் தரகராக செயல்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரிடம் சிபிஐ விசாரணையை முடித்த  நிலையில், கடந்த 22ம் தேதி அவரை அமலாக்கத்துறை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தது. அவருக்கு சட்ட உதவி வழங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, 3 வக்கீல்கள் விசாரணை அன்று காலை 10  மணிக்கும், மாலை 5 மணிக்கும் 15 நிமிடங்கள் மைக்கேலை சந்தித்து பேசினர். முதல்கட்ட விசாரணையை முடித்த அமலாக்கத்துறை அவரை டெல்லி நீதிமன்றத்தில் நேற்று விடுமுறை கால நீதிபதி சந்திரசேகர் முன் ஆஜர்படுத்தியது. அப்போது, ‘‘மைக்கேலிடம் கடந்த 27ம் தேதி விசாரணை நடத்தியபோது  சோனியா காந்தி பற்றி சில தகவல்களை கூறினார். பின் அவர் மருத்துவ சோதனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஒரு துண்டு சீட்டை தனது வக்கீல் அல்ஜோ கே ஜோசப் என்பவரிடம் அளித்தார். இதை பார்த்த  அமலாக்கத்துறை அதிகாரிகள் அதை பறிமுதல் செய்து படித்து பார்த்தனர்.

அதில், சோனியா காந்தி பற்றி கேள்விகளுக்கு எப்படி பதில் அளிக்க வேண்டும்? என அவர் கேட்டிருந்தார்.  தனக்கு வழங்கப்பட்ட சட்ட உதவியை  மைக்கேல் தவறாக பயன்படுத்துகிறார். அதனால், அவர் வக்கீல்களை சந்திப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது. நிதி முறைகேட்டில் புதிய ஆதாரங்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மைக்கேல் இங்கு வந்து விமானப்படை அதிகாரிகள், ராணுவ அமைச்சக அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய இடங்கள் பற்றி விசாரிக்க அவரை டெல்லியில் பல இடங்களுக்கு நேரில்  அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இதனால்  இவரை இன்னும் பல நாட்கள் காவலில் எடுத்து  விசாரிக்க ேவண்டும்’’ என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது காவலை நீதிமன்றம் மேலும் 7  நாட்கள் நீடித்தது. விசாரணையின்போது வக்கீல்களை சந்தித்து பேசுவதிலும் கட்டுப்பாடுகள் விதித்தது.

காங்கிரஸ் குற்றச்சாட்டு

நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்த புகார் குறித்து பதில் அளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என் சிங், ‘‘விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் பா.ஜ என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நாம்  பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் பெயரை கூறும்படி மைக்கேலுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பதையும் ஒரு செய்தி சேனல் காட்டியது.   ரபேல் ஒப்பந்தத்தில் யாரும் தப்பிக்க முடியாது. அதனால்,  அமலாக்கத்துறை மூலம் மக்களுக்கு அழுத்தம் கொடுக்க பா.ஜ முயற்சிக்கிறது’’ என்றார்.  இத்தாலி பெண்ணின் மகன், எவ்வாறு இந்தியாவின் அடுத்த பிரதமராக போகிறார் என அமலாக்கத் துறையிடம் மைக்கேல் கூறியதாக  வெளியான தகவல் குறித்தும் பதில் அளித்த சிங், ‘‘பா.ஜ.வின் கதை வசன எழுத்தாளர்கள் மிக அதிக நேரம் உழைக்கின்றனர்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: