நாடாளுமன்றத் தேர்தல்... பீகாரில் தொகுதி பங்கீடு குறித்துத் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் சுமூக உடன்பாடு

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் பீகாரில் தொகுதி பங்கீடு குறித்துத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் சுமூகமான உடன்பாட்டை எட்டியுள்ளன. பீகாரில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு தற்போது சுமூகமாக முடிவடைந்துள்ளது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ஒவ்வொரு கட்சிகளுக்குமான தொகுதி எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டது.

பீகாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுவது என ஆலோசனையின் முடிவில் உடன்படிக்கை செய்யப்பட்டது. இந்த தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் போட்டியிடவில்லை என்றும் அதற்கு மாறாக அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அவர் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 29 தொகுதிகளிலும், ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி 7 தொகுதிகளிலும், குஷ்வாகாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 4 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இதில் பாஜக 22 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 6 தொகுதிகளிலும், குஷ்வாகாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்தார்.

இதனால் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவரின் ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டியிருந்ததால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது. இதன்காரணமாக பாஜக குறைந்த தொகுதிகளை ஒதுக்க திட்டமிட்டது. இதற்கு ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் குஷ்வாகா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த குஷ்வாகா, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினார். மேலும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும் குஷ்வாகா விலகினார். இந்நிலையில் பீகாரில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்து இன்று ஒவ்வொரு கட்சிகளுக்குமான தொகுதி எண்ணிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: