மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் ராகுல் பிரதமராவதை யாரும் எதிர்க்கவில்லை : முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி பேட்டி

சென்னை : மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும், ராகுல்காந்தி பிரதமராவதை யாரும் எதிர்க்கவில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழு தலைவருமான வீரப்ப மொய்லி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக கூறினார். இப்போது 2 கோடி பேரின் வேலைவாய்ப்புகளை அழித்துக் கொண்டிருக்கிறார். விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கூறிய மோடி, கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். ரபேல் போர் விமான ேமாசடி குறித்து நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரித்தால் மட்டுமே மோடியின் மோசடி அம்பலமாகும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பிரச்னை எழுப்பும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும்.

பிரதமர் மோடி நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிப்பதில்லை. நாடாளுமன்றத்துக்கு வராமல் அங்குள்ள அறையில் உட்கார்ந்து கொண்டு கேலி கூத்தாக்குகிறார். எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வதில்லை. பாஜ ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களை மோடி ஏமாற்றியதன் விளைவு 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இதன் மூலம், விரைவில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைய மக்கள் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டனர். பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று அறிவிப்பதற்கு இது சரியான தருணம் அல்ல என்றுதான் மம்தா, இடதுசாரி கட்சிகள் கூறுகின்றனர். அவர் பிரதமராவதை யாரும் எதிர்க்கவில்லை. அவர் தலைமையில் ஆட்சி அமையும். ராணுவ தளபதியை பொய்யர் என்று நான் கூறியதாக எனது பேட்டி திரித்து கூறப்பட்டுள்ளது. அவர்களை நாங்கள் மதிக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்பி விஸ்வநாதன், கோபண்ணா, சிரஞ்சீவி, இரா.மனோகர், ஜி.கே.தாஸ், கஜநாதன், தணிகாச்சலம், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், ரூபி மனோகரன், வீரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: