நெல்லை காப்பகத்தில் இருந்து 7 சிறுவர்கள் நள்ளிரவில் தப்பி ஓட்டம்

நெல்லை: நெல்லை சரணாலயம் சிறுவர்கள் காப்பகத்தில் இருந்து நள்ளிரவில் 7 சிறுவர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து தப்பி சென்றனர். இதுகுறித்து சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி சிறுவர்களை தேடிவருகின்றனர்.  நெல்லை சந்திப்பு பகுதியில் சரணாலயம் சிறுவர்கள் காப்பகம் உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள், சாலை ஓரத்தில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள், சாலைகளில் சுற்றித்திரியும் சிறுவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு உணவு, உடைகள், கல்வி வழங்கி சமுதாயத்தில் நல்ல நிலைமைக்கு வரும் வகையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இங்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள், சிறுவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு உணவு முடித்து வழக்கம்போல் சிறுவர்கள் தூங்கச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த 7 சிறுவர்கள் நள்ளிரவு நேரத்தில் அறையின் ஜன்னல் கதவுகளை அறுத்து திறந்து தப்பிச் சென்று விட்டனர். நேற்று அதிகாலை காப்பக காவலாளி அறையின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் காப்பக நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.  புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற சிறுவர்களில் ஒருவன் மட்டும் சென்னை சேர்ந்தவன், மற்றவர்கள் நெல்லை, பேட்டை, சுத்தமல்லி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் நெல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: