உடுமலையில் ஆணவ படுகொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்

கோவை: பழனியை சேர்ந்தவர் கவுசல்யா (வயது 21). இவர், பொள்ளாச்சி கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த தலித் இளைஞரான உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்த சங்கரை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  இருவரும் குமரலிங்கத்தில் உள்ள சங்கரின் வீட்டில் வசித்து வந்தனர். இவர்களின் திருமணத்திற்கு கவுசல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  கடந்த 13.3.2016ம் தேதி கவுசல்யாவும், சங்கரும் உடுமலை பேருந்து நிலையம்  அருகே ஜவுளி கடைக்கு சென்றனர். அப்போது, கூலிப்படை ஒன்று அவர்களை வழிமறித்து வெட்டியது. இதில், சங்கர் இறந்தார். கவுசல்யா காயத்துடன் உயிர் தப்பினார். இதுதொடர்பாக, கவுசல்யாவின்  தந்தை சின்னச்சாமி  உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கவுசல்யா, சங்கரின் பெயரில் அறக்கட்டளை நிறுவி நடத்தி வந்தார். இதுதவிர, சமூக பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும், நிமிர்வு கலையகத்தில் பறையிைசையை கற்று வந்தார். இந்த கலையகத்தை  கோவை வெள்ளலூரை சேர்ந்த பறை இசைக்கலைஞர் சக்தி என்ற சத்தியநாராயணன் நடத்தி வந்தார். அப்போது, சக்தியும் கவுசல்யாவும் மறுமணம் செய்வதாக முடிவெடுத்தனர். அதன்படி, கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார்  படிப்பகத்தில் த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று மறுமணம் நடந்தது. சங்கரின் பாட்டி மாரியம்மாள் மாலை எடுத்து கொடுத்தார். இதில், திராவிடர் விடுதலை கழகத்தின் நிறுவனர் கொளத்தூர்  மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, சங்கரின் அப்பா வேலுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். திருமணத்திற்கு பின் கவுசல்யா, செய்தியாளர்களிடம் கூறுகையில், `சாதிய கொலைக்கான தனிச்சட்டம் அமையும் வரை எங்கள் போராட்டம் தொடரும். ஆணவ கொலை எங்கு நடந்தாலும் அதற்கு எதிராக எங்கள் குரல் ஒலிக்கும்  ’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: