வைகுண்ட ஏகாதசியன்று சோதனை முறையில் அட்டை பெட்டிகளில் லட்டுபிரசாதம் விநியோகம் : திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விரும்பி பெற்றுச்செல்வது லட்டு பிரசாதம். இதற்காக தினந்தோறும் 3 லட்சம் லட்டுகள் வரை தயார் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இந்த லட்டுகளை பக்தர்கள் கொண்டு செல்வதற்காக தேவஸ்தானம் சார்பில் ₹3க்கு பிளாஸ்டிக் கவர்கள் விற்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பதி நகரில் கடந்த அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோன்று பக்தர்களுக்காக வழங்கப்படும் லட்டுகள் பிளாஸ்டிக் கவர்களில் வழங்குவதை தவிர்க்கும் வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், விஐபி தரிசனத்தில் வரும் பக்தர்கள், கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ஸ்வீட் கடைகளில் வழங்குவது போல் அட்டை பெட்டிகளில் லட்டு பிரசாதங்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு இன்று காலை  அளித்த பேட்டி :

திருப்பதியை போன்று திருமலையிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.  திருமலை கோயில் நகரம் என்பதால் படிப்படியாக முழு அளவில் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த மாதம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. கோயிலுக்குள் பயன்படுத்தப்பட்டு வந்த சட்டத்திற்குட்பட்ட பிளாஸ்டிக் கவர்களை (50 மைக்ரானுக்கு உட்பட்ட) பயன்படுத்துவதையும் முழுவதும் நிறுத்த ஆலோசிக்கப்பட்டது. அதன்படி 1,2,4 லட்டுகள் வரை கொண்டு செல்லும் விதமாக லேமினேட் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் பெட்டிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் வரவேற்பை பொறுத்து ஒட்டுமொத்தமாக அட்டைப் பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வரவுள்ளனர். அன்றைய தினம் சோதனை முறையில் அனைத்து பக்தர்களுக்கும் அட்டை பெட்டிகளில் லட்டு பிரசாதம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.சுப்ரபாத சேவை ரத்துவரும் 16ம் தேதி மார்கழி மாதம் தொடக்கம் என்பதால் அன்று முதல் ஒரு மாதத்திற்கு ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாதம் ரத்து செய்யப்பட்டு ஆண்டாள் திருப்பாவை பாசுரம் மூலம் சுவாமியை துயில் எழுப்ப உள்ளனர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: