சென்னை: தமிழகம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு செட்டில்மென்ட் பத்திரம், விற்பனை பத்திரம் உள்ளிட்ட பலவகையான பத்திரம் பதிவு செய்யப்படுகிறது. இதில் தான செட்டில்மென்ட் பத்திரம் என்பது சொத்தை தன் வாரிசுகளுக்கு எழுதி கொடுக்கும் குடும்ப ஏற்பாடு பத்திரம் ஆகும். தானமாக சொத்துக்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரமாக பதிவு செய்து வாங்கிய பிறகு தானம் வாங்கிய வாரிசுகள் அல்லது ரத்த சொந்தங்கள் தந்தை, தாய், சகோதரி, பெரியப்பா, வாரிசு இல்லாதவர்களை விரட்டி விடுகின்றனர்.
சிலர் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றனர். ஆனால் அப்படி பத்திரத்தை பதிவு செய்யும்போதே நிபந்தனையுடன் பத்திர பதிவு நடந்தால், தானம் கொடுத்தவரை கவனிக்க மறுக்கும் பட்சத்தில் அந்த பத்திரத்தை ரத்து செய்ய முடியும். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவால் மூத்த குடிமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள். சொத்தை எழுதிக் கொடுத்தப் பிறகு வாரிசுகள் அவர்களை கவனிக்காமலும் வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவுத்துறை ஐஜிக்கு வந்தது. அந்த புகாரில் சொத்தை எழுதிக்கொடுக்கும் எங்களுக்கு அதை ரத்து செய்யும் அதிகாரம் இல்லையென்றால் எங்களை யார் கவனிப்பார்கள் என்று மூத்த குடிமக்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில், செட்டில்மென்ட் பத்திரம் ரத்து செய்வது குறித்து கீழ் க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறியிருக்கிறார்.* எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் ஏற்பாடு ஆவணங்களை எழுதிக் கொடுத்தவர் மட்டும் ரத்து செய்து ஆவணத்தை பதிவுக்கு தாக்கல் செய்யும் நிகழ்வுகளின் அந்த ஆவணத்தை பதிவுக்கு ஏற்காமல் மறுப்பு சீட்டு வழங்க வேண்டும். *ரத்து ஆவணங்களை எழுதி பெற்றவரும், கையெழுத்திட்டு இருந்து பதிவு அலுவலர் முன் தோன்றி கையொப்பமிட்டால் அந்த ஆவணத்தை பதிவுக்கு ஏற்கலாம்.*நிபந்தனைகளுடன் எழுதிக் கொடுக்கப்பட்ட ஏற்பாடு ஆவணங்களை பொறுத்து அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் எழுதி பெற்றவரால் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை தெளிவாக ரத்து ஆவணத்தில் குறிப்பிட்டு எழுதிக் கொடுத்தவர் மட்டும் அந்த ரத்து ஆவணத்தை பதிவுக்கு தாக்கல் செய்யும் நிகழ்வுகளில் முன் ஆவணத்தில் அந்த நிபந்தனைகள் உள்ளதை பரிசீலித்து உறுதி செய்து கொண்டு ரத்து ஆவணத்தை பதிவுக்கு ஏற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் சீனியர் சிட்டிசன்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கள் பிள்ளைகள் சொத்து எழுதி வாங்கிவிட்டு வீட்டை விட்டு துரத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி