வெ.இண்டீசுக்கு எதிராக சதம்.... கோஹ்லியை சமன் செய்தார் மொமினுல்

சிட்டகாங்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் மொமினுல் ஹக் சதம் அடிக்க, வங்கதேச அணி சிறப்பான துவக்கம் கண்டுள்ளது. இந்த ஆண்டில் அதிக சதம் அடித்த கோஹ்லியின் சாதனையை மொமினுல் சமன் செய்துள்ளார். வங்கதேசம் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. வெஸ்ட் இண்டீசின் ரோச் வேகத்தில், ஆட்டத்தின் 3வது பந்தில் துவக்க வீரர் சவுமியா சர்கார் டக் அவுட் ஆனார். ஆனாலும், இம்ருல் கேயஸ், மொமினுல் ஹக் சிறப்பாக ஆடினர். இந்த ஜோடி 104 ரன் சேர்த்த நிலையில் இம்ருல் (44) ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மொமினுல் ஹக் சதம் விளாசினார். இந்த ஆண்டில் டெஸ்ட் போட்டியில் இவர் அடிக்கும் 4வது சதம் இது.

இதன் மூலம், 2018ல் டெஸ்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியின் விராட் கோஹ்லியை மொமினுல் சமன் செய்துள்ளார். மேலும் மொமினுல் 135 பந்திலேயே சதம் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இவர் 120 ரன் சேர்த்த நிலையில், கேப்ரியல் பந்தில் வெளியேற வங்கதேச அணி சற்று தடுமாற்றம் கண்டது. ஷாகிப் அல் ஹசன் (34), முஷ்பிகுர் ரஹிம் (4), மகமதுல்லா (3) ஆகியோரை கேப்ரியல் தனது அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற்றி, வங்கதேசத்தின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். ஆனாலும் பின்வரிசை வீரர்கள் ஓரளவுக்கு தாக்குபிடித்தனர். ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களுடன் உள்ளது.  நயீம் ஹசன் 24, தைஜூல் இஸ்லாம் 32 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல் 4, வார்ரிகன் 2, ரோச், பிஷூ தலா 1 விக்கெட் கைப்பற்றி உள்ளனர். 2ம் நாள் ஆட்டம் இன்று நடக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: