சிபிஐ இயக்குனர் வழக்கில் அறிக்கை விவரங்கள் வெளியே கசிந்தது எப்படி? : உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி : சிபிஐ சிறப்பு இயக்குனர் அலோக் வர்மா தாக்கல் செய்த அறிக்கையின் விவரங்கள் வெளியே கசிந்தது எப்படி என கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டனர். இதையடுத்து மத்திய அரசு இருவருக்கும் கட்டாய விடுப்பு கொடுத்தது. பின்னர் இதுதொடர்பாக அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிபிஐ இயக்குனர் மீதான புகார்கள் பற்றி ரகசியமாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து அலோக் வர்மாவை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரித்த ஆணையம் அதுதொடர்பான விவரங்கள் அடங்கிய அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் நகல், அலோக் வர்மாவுக்கு அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கை 20ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து அலோக் வர்மா தனது பதில் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நேற்று முன்தினம் பிற்பகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆனால் அதுகுறித்த அனைத்து விவரங்களும் நீதிமன்றம் விசாரிக்கும் முன்னதாகவே ஊடகங்களில் பிரசுரம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அலோக் வர்மா தாக்கல் செய்த அறிக்கையின் விவரங்கள் வெளியானது குறித்து நீதிபதிகள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது. இது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த வழக்கு விவகாரத்தில் எங்களுக்கு சிறப்பு ஆலோசகர் தேவைப்படுவதால் விசாரணைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என அலோக் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாரிமன் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: நீதிமன்றம் என்பது யாருடைய சொந்த கருத்துகளையும் கேட்கும் இடமோ அல்லது நடைபாதையோ கிடையாது. சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறும் நிகழ்வுகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும். மேலும் இந்த நீதிமன்றத்திற்கு என்று ஒரு தனி மரபு உள்ளது. அது கெட்டுப்போவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நீதிமன்ற விவகாரத்தில் நடைமுறை என ஒன்று இருந்தால் யாராக இருந்தாலும் கட்டாயம் கடைப்பிடித்தே தீர வேண்டும். மேலும் ஏதேனும் ஒரு குறையை கூறிக்கொண்டு எங்களிடம் கோரிக்கை வைக்கிறீர்கள், பிறகு அதை அப்படியே கொண்டு போய் ஊடகங்களிடமும் கொடுத்து விடுகிறீர்கள். இது சரியான நடைமுறையா?

வெறுமென குற்றச்சாட்டுகளை மட்டும் எங்களிடம் கூறுகிறீர்கள், பிறகு அதனை வெளியேயும் சொல்லி விடுகிறீர்கள். நீங்கள் மனதில் நினைப்பதை எல்லாம் எங்களிடம் கொண்டு வந்து கொட்டாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை உள்ளது என கடும் கோபத்தை காட்டிய தலைமை நீதிபதி உங்களின் எந்த வழக்குகளும் விசாரிக்க தகுதியற்றவை எனக்கூறி அடுத்த விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: