டிஎன்பிஎஸ்சி குரூப் 1 விடைத்தாள் முறைகேடு பயிற்சி நிறுவன இயக்குநர் முன்ஜாமீனை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு: 10 நாட்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 விடைத்தாள் முறைகேடு வழக்கில் அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றம், அவர் மேலும் 10 நாள் விசாரணைக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2015ம் ஆண்டு 68 பணியிடங்களுக்கு நடந்த குரூப் 1 தேர்வு விடைத்தாள்களை எடுத்து, அதில் திருத்தங்கள் செய்து மீண்டும் வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டியும் அதனால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி மதுரையை சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம்,  இந்த முறைகேடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு  விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது. விசாரணையில், 222 விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கால அவகாசம் கோரியதால் வழக்கு அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்போலோ பயிற்சி மையத்திலிருந்து அதிக அளவிலான தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதால் அந்த மையத்தையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது.  இதையடுத்து, அப்போலோ கல்வி மையத்தின் இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் முன் ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், 8 வாரம் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், சாம் ராஜேஸ்வரனுக்கு தரப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி குற்றப்பிரிவு போலீஸ் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாம் ராஜேஸ்வரன் முறைகேடாக மாணவர்களை தேர்ச்சி பெற வைத்திருப்பதாகவும் அவரை காவலில் வைத்து விசாரித்தால்தான் பல முறைகேடுகள் வெளிவரும் என்றும், மனிதநேயம் பயிற்சி நிறுவனத்துக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 மனுவை விசாரித்த நீதிபதி, செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த நிபந்தனைப்படி 8 வாரங்கள் சாம் ராஜேஸ்வரன் மத்திய குற்றப்பிரிவு முன் முழுமையாக ஆஜராகியுள்ளார். முன் ஜாமீனை ரத்து செய்ய எந்த காரணமும் இல்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. சாம் ராஜேஸ்வரன் நவம்பர் 19 முதல் டிசம்பர் 3 வரை 10 வேலை நாட்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: