மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்குகளால் இருளில் மூழ்கும் சாலைகள்: சீரமைக்க கோரிக்கை

 

திருவொற்றியூர் மே 20: மணலி மண்டலம் 16வது வார்டில் 600க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மணலி மண்டலம், 16வது வார்டில் ஆண்டார்குப்பம், மணலி புதுநகர், துவாரகா நகர், கன்னியம்மன்பேட்டை, கடப்பக்கம் போன்ற பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட தெருக்களில் சுமார் 6 ஆயிரம் தெரு விளக்குகள் உள்ளன. இவற்றை மணலி மண்டல தெருவிளக்கு பிரிவு அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த வார்டில் உள்ள பல தெருவிளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளது. குறிப்பாக ஆண்டார் குப்பம் அருகே, சாலையில் தெரு விளக்குகள் அமைக்க கம்பம் நடப்பட்டு பல மாதங்களாகியும் அதில் விளக்கு பொருத்தாமல் கிடப்பில் உள்ளது. அதேபோல் பேஸ்- 1, 100 மற்றும் 270வது பிளாக், ஆர்.எல் நகர் போன்ற பகுதிகளில் மின்விளக்குகளே இல்லை. கன்னியம்மன்பேட்டை, கடப்பாக்கம் போன்ற பகுதிகளிலும் மின்விளக்குகள் எரியவில்லை.

இதுபோல் வார்டு முழுவதும் பல இடங்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் நடந்து வரும் பொதுமக்களை தெருநாய்கள் கடிப்பதும், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல், பைக்கில் வருபவர்கள் மோதி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது. மேலும் இருளை பயன்படுத்தி மர்ம நபர்கள் பொதுமக்களிடம் வழிப்பறி செய்கின்றனர்.

அனைத்து பகுதிகளிலும் முழுமையாக தெருவிளக்கு அமைக்கவும், பழுதான விளக்குகளை சரி செய்ய வேண்டும் என தெருவிளக்கு பிரிவு அதிகாரியிடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், மெட்டீரியல் ஸ்டாக் இல்லை, ஆர்டர் கொடுத்திருக்கிறோம் என கூறி நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மணலி மண்டலம் 16வது வார்டில் பழுதடைந்த தெருவிளக்குகளால் இருளில் மூழ்கும் சாலைகள்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: