கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 66 பேருக்கு அபராதம்: போலீசார் நடவடிக்கை

 

சென்னை, மே 20: கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 66 இளைஞர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்குகளை, கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டிச் சென்று சாகசத்தில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. இவர்கள் உத்தண்டி சுங்கச்சாவடியில் இருந்து மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வரை பைக் ரேசில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கிராமப்புற மக்கள், சக வாகன ஒட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.  எனவே, அதிவேகமாக பைக்குகளில் செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்தது. அதன்படி, மாமல்லபுரம் மற்றும் கேளம்பாக்கம் கானத்தூர் போலீசார் அவ்வப்போது ரோந்துப் பணியில் ஈடுபட்டு பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிந்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

ஆனாலும், அபராதத்தை செலுத்தும் இளைஞர்கள் மீண்டும் பைக் ரேசில் ஈடுபடுகின்றனர். இதனால் போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். இதுதொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்துடன் வெளியானது. இந்நிலையில், பள்ளிக்கரணை போக்குவரத்து உதவி ஆணையர் ஸ்ரீதர், கேளம்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 6 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே குன்றுகாடு பகுதியில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி நோக்கி விலை உயர்ந்த ஸ்போர் ட்ஸ் பைக்குகளில் வேகமாக வந்த 63 இளைஞர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அதனைத்தொடர்ந்து, இளைஞர்களிடம் பைக் ரேசில் ஈடுபடுவது சட்டவிரோத செயல் என்றும், அதிவேக பயணத்தால் விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் இப்பகுதி மக்கள் சாலையை கடக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்.

மேலும், சாலை விபத்துகளிலும் சிக்கி உயிரிழக்கின்றனர். எனவே, கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபடுவதை கைவிட்டு விபத்தில்லா பயணம் மேற்கொள்ள வேண்டும், என்று போலீசார் அறிவுரைகளை வழங்கினர். மேலும், பைக்கில் வந்த இளைஞர்களை மீண்டும் சென்னைக்கு திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கிழக்கு கடற்கரை சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 66 பேருக்கு அபராதம்: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: