சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு

பெரம்பூர், மே 21: பெரம்பூரில் சிறுமியை ஓடஓட விரட்டி தெருநாய்கள் கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சென்னையில் நான்காவது சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து வளர்ப்பு நாய்கள் மற்றும் தெருநாய்களால் சிறுவர்கள், சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இதில் சென்னை ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பணிபுரியும் காவளாளியின் 5 வயது மகளை கடந்த 5ம் தேதி புகழேந்தி என்பவர் வளர்க்கும் நாய் கடித்தது. இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை தொடர்ந்து வேளச்சேரியில் 9 வயது சிறுவன் கோடை விடுமுறைக்காக ஆலந்தூர் பகுதிக்குச் சென்று அங்குள்ள காவலர் குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு வீட்டு நாய் கடித்தது. இதனை தொடர்ந்து புளியந்தோப்பு கே.பி பார்க் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை நாய் கடித்தது. இந்த சம்பவங்களில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது நான்காவது சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெரம்பூர் கவுதமபுரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் அமீத். பெரம்பூர் லோகோ பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். கடந்த 18ம்தேதி மாலை அவரது மனைவி தய்யூப் பேகம், இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் அனிஷா மற்றும் மற்றொரு மகள் தனிஷா ஆகியோருடன் பெரம்பூர் நியூ காமராஜர் நகர் பகுதியில் உள்ள மசூதிக்கு சென்றுவிட்டு திரும்பினார். கவுதமபுரம் ஹவுசிங் போர்டு பின்புறம் வந்தபோது அங்கிருந்த தெருநாய்கள் சிறுமி அனிஷாவை துரத்தியுள்ளன. அவருக்குப் பின் சற்று தூரத்தில் மற்றொரு மகளுடன் அவரது தாய் வந்து கொண்டிருந்தார். நாய் துரத்தியதால் பயந்து போன அனிஷா, ஓடியபோது நான்கு நாய்களில் ஒரு நாய் சிறுமியை கடித்துள்ளது. பின்னால் வந்த சிறுமியின் தாய் கற்களை கொண்டு நாய்களை விரட்டியதால் சிறுமி சிறு காயங்களோடு தப்பியுள்ளார்.

காயமடைந்த சிறுமி அனிஷா பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிறுமி அனிஷாவை நாய்கள் துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து அனிஷாவின் தந்தை அமீத் கூறுகையில், ‘‘எங்களது பகுதியில் நாய்கள் மிக அதிகளவில் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் தைரியமாக செல்ல முடிவதில்லை. மேலும் நாய்களை பிடிக்க ஆட்கள் வந்தால் அங்குள்ள மக்கள் நாய்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர். நாய்களை பிடிக்கக் கூடாது என கூறுகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும்’’ என்றார்.

The post சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: