ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயற்சி வாலிபர்கள் தாக்கியதில் பயணி பரிதாப சாவு

* கொள்ளையர்களின் அட்டூழியத்தால் உயிர் பறிபோன சோகம்

சென்னை: ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற சம்பவத்தில், ரயிலில் இருந்து கீழே இழுத்து தள்ளி கொள்ளையர்கள் சரமாரியாக தாக்கியதில் பயணி பரிதாபமாக இறந்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் சத்தீஸ்வரன் (45). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிசைனர் வேலை செய்து வந்தார். இவர், கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றார். அங்கிருந்து கடந்த 9ம் தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். கும்மிடிப்பூண்டி அடுத்த நந்தியம்பாக்கம்  ரயில் நிலையத்தில் ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. ரயில் படிக்கட்டில் அமர்ந்து செல்போனில் பேசியபடி சத்தீஸ்வரன் பயணம் செய்து ெகாண்டிருந்தார். அப்போது, நடைமேடையில் இருந்த 4 வாலிபர்கள், சத்தீஸ்வரனின் செல்போனை பறித்தனர். சுதாரித்துக் கொண்ட அவர், ரயில் கைப்பிடியை பிடித்துக் கொண்டு, உள்ளே ஓட முயன்றார்.

அப்போது, அந்த 4 பேரும் ஓடும் ரயிலில் இருந்து சத்தீஸ்வரனை இழுத்து நடைமேடையில் தள்ளி, சரமாரியாக தாக்கி, அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். இதில், சத்தீஸ்வரன் படுகாயமடைந்தார். இதுகுறித்து ரயில் நிலைய ஊழியர் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, படுகாயமடைந்த சத்தீஸ்வரனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார். விசாரணையில், நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (19), பொன்னேரியை சேர்ந்த விஷ்ணு (19) உள்பட 4 பேர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, கார்த்திக், விஷ்ணு ஆகிய இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: