உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம் ரபேல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: நீதிமன்றம் தலையிடுவது தேவையற்றது என அரசு எதிர்ப்பு

புதுடெல்லி: ரபேல் விமான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று காரசார இறுதி விவாதம்  நடந்தது. இதைத் தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம்  கோடிக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த விமானங்களின் உதிரி பாகங்களை இணைத்து விமானங்களை  உருவாக்குதல், உதிரி பாகங்கள் பொருத்துதல், பராமரிப்பு செய்தல் போன்றவற்றுக்கான ஒப்பந்தம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ்  நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், விமான கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றன. அதனால், இந்த விமான கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து  செய்யக் கோரியும், இதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள்  மனோகர் லால் சர்மா, வினித் டண்டா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, மூத்த  வழக்கறிஞர் பிரசாத் பூஷண் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.  இவற்றை கடந்த மாதம் 31ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள்  யூ.யூ.லலித் மற்றும் கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, ஒப்பந்தம் தொடர்பான அனைத்து விவரங்களையும், விமானத்தின் விலையை நிர்ணயம் செய்ய பின்பற்றப்பட்ட நடைமுறைகளையும்  சீலிடப்பட்ட உறையில் வைத்து சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதே ேநரம், ‘சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட இயலாது’ என்றும்  அறிவித்தது. அதன்படி, கடந்த 12ம் தேதி ஒப்பந்தம் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.  இந்நிலையில், இந்த வழக்கு  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கும், அரசுக்கும் இடையே  காரசார வாதம் நடந்தது.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா: இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை 2015,  மே மாதம்தான் தொடங்கியது. ஆனால், 2015 ஏப்ரலில் பேச்சுவார்த்தை தொடங்கியதாக  பிரதமர் மோடி கூறியுள்ளார், இது பொய் தகவல். ஒப்பந்தத்தில், பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக, விமானத்தின் விலை ரூ.1,632 கோடி என  கூறப்பட்டுள்ளது. இது, முதலில் முடிவு செய்த விலையை விட பலமடங்கு அதிகம். விமானத்தின் விலை குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்க  முடியாது என அரசு கூறுவதை ஏற்க  முடியாது.

மேலும், ஏற்கனவே 126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு 36 விமானங்களை மட்டுமே வாங்க முடிவு செய்தற்கான  காரணமும் தெளிவாக்கப்படவில்லை. அதேபோல், எச்ஏஎல். நிறுவனத்துக்கும் இந்த ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. ரிலையன்ஸ் டிபன்ஸ்  நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தத்தை  பிரதமர் வழங்கியுள்ளார். இதற்கு முறையான விளக்கம் இல்லை. என்ன காரணத்துக்காக 126 விமானங்கள்  வாங்கும் ஒப்பந்தம் கைவிடப்பட்டது? மேலும், அதே அளவுக்கான தொகையில் 36 விமானங்கள் வாங்க காரணம் என்ன? பழைய ஒப்பந்தத்தை கைவிட  முறையான காரணம் என்ன?

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்: விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டால், அந்த விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிப்பு, அதன்  தொழில்நுட்பம் போன்றவை உள்நாட்டு நிறுவனத்துடன் பரிமாறப்பட வேண்டும், அதன் மூலம், எச்ஏஎல்.லில் தயாரிப்பு பணி நடக்கும். இதுதான்  விதிமுறை, ஆனால், இந்த ஒப்பந்தத்தில் அது நடக்கவில்லை. 40 ஆண்டுகளுக்கான பராமரிப்பு, முக்கிய உதிரி பாகங்கள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட  வேண்டும். இதேபோல். 70:30 விகிதத்தில் பாகங்கள் தயாரிப்பது என ஒப்பந்தம் இருக்க வேண்டும். ஆனால், இங்கு 95% உதிரி பாகம் பிரான்ஸ் நாட்டில்  தயாரிக்கப்படும் என உள்ளது, மேலும், 36 விமானங்களை மட்டுமே வாங்குவது பற்றி பாதுகாப்பு, சட்டம், நிதித் துறை அமைச்சர்களுக்கு கூட தெரியாது.

மேலும், தகுதியே இல்லாத புதிய ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம், ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் லாபம் அடைய வேண்டும்  என்ற ஒரே நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரதமர் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டுள்ளார். பிரான்ஸ் சென்றபோது  அவரே தன்னிச்சையாக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளார். அந்த அதிகாரத்தை அவருக்கு வழங்கியது யார்? மத்திய அரசு தலைமை வழக்கறிஞர்  கே.கே.வேணுகோபால்: நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனால், இந்த ஒப்பந்த விவரங்–்கள் ரகசியமாக வைக்கப்பட்டன.  இந்த ரகசியங்களை நாடாளுமன்றத்திலோ, தகவல் உரிமை சட்டத்தின்படியோ கூட கூற முடியாது.

பிரசாந்த் பூஷண்: விமானத்துக்கு கூடுதலாக ரூ.670 கோடி கொடுக்கப்படுவதற்கு, அதில் பொருத்தப்படும் ஆயுதங்கள், உயர் தொழில்நுட்ப கருவிகள்தான்  காரணம்  என நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. தனது குட்டு வெளிப்படாமல் இருக்கவே, ஒப்பந்தம் ரகசியமானது என கூறி  மத்திய அரசு  நாடகமாடுகிறது. இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளன, எனவே, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

மற்றொரு மனுதாரர் அருண் ஷோரி: பாதுகாப்பு துறையில் எந்த அனுபவமும் இல்லாத நிறுவனத்தை எப்படி ஒப்பந்தத்தில் சேர்க்கலாம்?

 ஒப்பந்த விவரங்களை மறைப்பது ஏன்? சுகோய் 4ம் தலைமுறை விமானத்தை எச்ஏஎல் நிறுவனத்தில் தயார் செய்யும்போது, எப்படி ரபேல் உதிரி  பாகம் மற்றும் விமான தயாரிப்பு சாத்தியமில்லை என கூற முடியும்? அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி கோகாய், வழக்கின்  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.

விமானப்படை அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி

வழக்கு தொடர்பாக அரசு மற்றும் மனுதாரர்களின் வழக்கறிஞர்களுக்கு இடையே காரகார வாதம் நடந்து முடிந்த பிறகு, ‘‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக  விமானப்படை அதிகாரிகளிடம் கருத்து கேட்க விரும்புகிறோம். எனவே, அவர்களை உடனடியாக நீதிமன்றம் வர உத்தரவிடுகிறேன்’’ என தலைமை  நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார். அதன்படி, உணவு இடைவேளைக்கு பிறகு விமானப்படை அதிகாரிகள் அனில் கோஸ்லா, வி.ஆர்.சவுத்ரி  ஆஜராகினர்.

அவர்களிடம் நீதிபதிகள் கேட்ட கேள்விகளும், அதற்கு விமானப்படை அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:

 நீதிபதிகள்: விமானப்படையில் தற்போது உள்ள விமானங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை உள்ளதா?  

அதிகாரிகள்: ‘இலகு ரக தேஜஸ் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை.

நீதிபதிகள்: இந்தியாவில் எந்த தலைமுறை போர் விமானங்கள் உள்ளன?

அதிகாரிகள்: 4வது தலைமுறை விமானங்கள் உள்ளன. சுகோய் போர் விமானம், 4வது தலைமுறை விமானமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

தலைமை நீதிபதி: விமான படையில் புதிதாக சேர்க்கப்பட்ட விமானம் எது?

அதிகாரிகள் : சுகோய்- 30 ரக 4வது தலைமுறை விமானம்.

நீதிபதி ஜோசப்: கடந்த ஏப்ரல் 2015 வரை 126 ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்ட பிறகு, சட்டென 36 விமானமாக குறைத்தது ஏன்?  நம்மிடம் மிகவும் நவீன தொழில்நுட்பம் அடங்கிய விமானம் உள்ளதா?

அதிகாரிகள்:  இல்லை, நம்மிடம் உள்ளது 3.5வது தலைமுறை அல்லது 4வது தலைமுறை விமானங்களே.

தலைமை நீதிபதி: எந்தெந்த நாடுகள் ரபேல் விமானங்களை வாங்க டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளன?

அதிகாரிகள்: கத்தார், எகிப்து, இந்தியா.

60 கிமீ தூரத்தில் இருந்து மிக துல்லியமாக தாக்கும்

வாதத்தின்போது மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், ‘‘ரபேல் விமானம் 60 கிமீ தொலைவில் இருந்து   இலக்குகளை துல்லியமாக தாக்கும் தொழில்நுட்பம் உடையது. கார்கில் போரில் பல உயிர்களை இழந்தோம். எதிர்காலத்தில் அப்படிப்பட்ட  சம்பவங்கள்  ஏற்படாமல் இருக்க ரபேல் விமானம்  நமக்கு தேவைப்படுகிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: