கந்தசஷ்டி விழா கோலாகலம் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார் ஜெயந்திநாதர்: லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர முழக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் முழக்கம் விண்ணதிர  சூரபத்மனை ஜெயந்திநாதர் வதம் செய்தார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது.   6ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது.  இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, யாகசாலை பூஜை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. உச்சிகால பூஜை முடிந்ததும் யாகசாலையில் தீபாராதனை நடந்தது. அதைதொடர்ந்து  சுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் மண்டபம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பின்னர் சூரசம்ஹாரத்திற்காக மாலை .30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு எழுந்தருளினார். முதலில் 5.12   மணிக்கு கஜமுகனையும், 5.26 மணிக்கு சிங்கமுகனையும், அடுத்து 5.0 மணிக்கு சூரனையும், 5.55 மணிக்கு  மாமரம் மற்றும் சேவலையும் ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார். அப்போது கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என விண்ணதிர கோஷம் எழுப்பினர். பின்னர் பக்தர்கள்  கடலில் நீராடி விரதத்தை முடித்தனர்.  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, காமராஜ், வெல்லமண்டி நடராஜன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  சூரசம்ஹாரத்துக்கு பின்னர் சுவாமி சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளினார்.  அங்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இன்று திருக்கல்யாண உற்சவம்: இன்று காலை 5.15 மணிக்கு கோயிலில் இருந்து தெய்வானை அம்பாள் தபசு காட்சிக்கு எழுந்தருளுகிறார். மாலையில் கோயிலில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர் மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு  எழுந்தருளுகிறார். 5ம் சந்தியில் மாலையில் சுவாமி அம்மனுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவில் கோயிலில் சுவாமி, தெய்வானை திருக்கல்யாணஉற்சவம் நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: