வாரணாசி கங்கை ஆற்றில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் முதல் பல்நோக்கு முனையம் திறப்பு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

வாரணாசி: வாரணாசி கங்கை ஆற்றில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் முதல் பல்நோக்கு முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ரூ.1,571.95 கோடியில் 2 புதிய தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கங்கை ஆற்றில், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் முதல் பல்நோக்கு முனையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜ மாநில தலைவர் மகேந்திர நாத் பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆணையத்தின் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் தேசிய நீர்வழிச்சாலை-1ல் (கங்கை ஆற்றில்) 4 பல்நோக்கு முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதன் மொத்த செலவான ரூ.5,369.18 கோடியில் மத்திய அரசும், உலக வங்கியும் சம பங்களிப்பை அளித்துள்ளன. இதில், முதல் முனையம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கொல்கத்தா துறைமுகத்தில் இருந்து முதல் வர்த்தக சரக்கு கப்பல், வாரணாசி வந்தடைந்தது. இந்த கப்பல் கடந்த மாதம் கடைசி வாரத்தில் கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டது. முன்னதாக, இக்கப்பலின் நீர்வழித்தடம் குறித்து குறும்படம் மூலமாக அதிகாரிகள் பிரதமரிடம் விளக்கம் அளித்தனர். 1500 முதல் 2000 டன் எடையுள்ள வர்த்தக சரக்கு கப்பல்கள் போக்குவரத்தை கங்கை ஆற்றில் மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

10 ஆண்டுக்கு முன்னரே வர வேண்டிய திட்டம்

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். வாரணாசியும் ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சியை கண்கூடாக பார்க்கிறது. இவையெல்லாம் 10 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டியவை. ஆனால் அப்போது நடக்கவில்லை. இன்று இத்திட்டங்கள், புதிய இந்தியா உருவாவதற்கான உதாரணங்களாக விளங்குகின்றன. தற்போது நாடே அரசியலில் வளர்ச்சியை மட்டுமே விரும்புகிறது. மக்களோ, நாட்டின் வளர்ச்சியை பார்த்துதான் அவர்களின் முடிவை எடுப்பார்கள், மாறாக ஓட்டு வங்கி அரசியலை பார்த்து அல்ல’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: