நடிகை வசுந்தரா தாசை மானபங்கம் செய்ய முயற்சி : கார் டிரைவர் மீது வழக்கு பதிவு

பெங்களூரு: ‘சிட்டிசன்’ திரைப்பட நடிகை வசுந்தரா தாசை நடுரோட்டில் ஆபாசமாக  திட்டி, மானபங்கம் செய்ய முயன்ற  தனியார் கார் டிரைவரை போலீசார் தேடி  வருகின்றனர். பெங்களூருவை சேர்ந்தவர் நடிகை வசுந்தரா தாஸ். இவர்  தமிழில் வெளியான சிட்டிசன் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்தார். அதே திரைப்படத்தில் சில பாடல்களையும்  பாடியிருக்கிறார்.  இதேபோன்று கன்னடத்தில் சில படங்களில் நடித்து, பல பாடல்களை பாடியுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி பெங்களூரு பாஷியம் சர்க்கிள் பகுதியில் இருந்து  மல்லேஸ்வரத்தை நோக்கி தனது காரில் வசுந்தரா தாஸ் சென்றார்.  அவரை பின்தொடர்ந்து சென்ற தனியார் கார் டிரைவர் ஒருவர், மல்லேஸ்வரம் 18வது  கிராசில் வசுந்தரா தாசின் வாகனத்தை முந்திச் சென்று நிறுத்தினார். பின்னர், வசுந்தராவை ஆபாசமாக திட்டினார்.  மேலும், அவரை தொடவும் முயற்சி  செய்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டு அக்கம்  பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். தொடர்ந்து வசுந்தரா தாசை தாக்கவும் அவர் முயன்றுள்ளார். இதனால், மக்கள் டிரைவரை விரட்டினர். இந்த சம்பவம் குறித்து நேற்று காலை போலீசில் வசுந்தரா புகார் அளித்தார். அதன் பேரில் டிரைவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த மல்லேஸ்வரம்  போலீசார், அவரை  தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: