கேப்டன் கோஹ்லியின் ஹாட்ரிக் சதம் வீண் 43 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

புனே: இந்திய அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. கேப்டன் கோஹ்லி ஹாட்ரிக் சதம் விளாசிய நிலையில், சக வீரர்கள் ஒத்துழைக்காததால்  இந்திய அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன் குவித்தது. ஷாய் ஹோப்  அதிகபட்சமாக 95 ரன் (113 பந்து, 6 பவுண்டரி,  3 சிக்சர்) விளாசினார். நர்ஸ் 40 (22 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மயர் 37 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஹோல்டர் 32, கே.பாவெல் 21, ஹேம்ராஜ், ரோச்* தலா  15 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 4, குல்தீப் 2, புவனேஷ்வர், கலீல், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 284 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் 8 ரன் எடுத்து  ஹோல்டர் வேகத்தில் கிளீன் போல்டானார். தவான் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 79 ரன் சேர்த்தது. தவான் 35 ரன் எடுத்து வெளியேறினார். ஒரு முனையில் கோஹ்லி உறுதியுடன் விளையாட, ராயுடு 22 ரன், ரிஷப்  பன்ட் 24 ரன், டோனி 7, புவனேஷ்வர் 10 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர்.

வழக்கம்போல அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 3வது சதம் அடித்து ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார். அவர் 107 ரன் (119 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சாமுவேல்ஸ்  பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். சாஹல், கலீல், பூம்ரா சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 47.4 ஓவரில் 240 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. குல்தீப் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சாமுவேல்ஸ் 3, நர்ஸ், மெக்காய், ஹோல்டர் தலா 2, ரோச் 1 விக்கெட் வீழ்த்தினர்.வெஸ்ட் இண்டீஸ் அணி 43 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 4வது ஒருநாள் போட்டி மும்பையில் நாளை நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: