ராஜஸ்தான் மாநிலத்தில் ஆரவல்லி மலை தொடரில் 31 மலைக்குன்றுகள் மாயம்: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி

புதுடெல்லி: ராஜஸ்தானில் ஆரவல்லி மலைத்தொடரில் 31 சிறிய மலைகள் மாயமானதை அறிந்து உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இதையடுத்து, இந்த மலையில் 115.34  ஹெக்டேரில் நடக்கும் சுரங்க பணிகளை 48 மணி நேரத்தில் நிறுத்தும்படி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.   வட இந்தியாவில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர், டெல்லி அருகே தொடங்கி அரியானா, ராஜஸ்தான், குஜராத் என நாட்டின் மேற்கு  பகுதி வரை நீண்டுள்ளது. 700 கிலோ மீட்டர்  நீளமுள்ள இந்த  மலைத்தொடரில் ராஜஸ்தான் பகுதியில் இருந்த 31 சிறிய மலைகளை  சுரங்க மாபியாக்கள் சூறையாடி விட்டதாக மத்திய அரசின் அதிகாரமளித்தல் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில், இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் அரசும் ஆரவல்லி மலைத் தொடரில் நடக்கும்  சுரங்கங்களின் நிலவரம் பற்றிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: ஆரவல்லி மலைப் பகுதியில் செயல்படும் சுரங்கங்கள் மூலம் ராஜஸ்தான் அரசு ₹5,000 கோடி வருமானம் ஈட்டுகிறது. இப்பகுதியில் 115.34 ஹெக்டேரில் சட்ட விரோதமான சுரங்கங்கள்  நடப்பது ஆய்வறிக்கை மூலம் உறுதியாகி இருக்கிறது. தற்போது, அந்த மலைத் தொடரில் 31 சிறிய மலைகள் மாயமாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.   

ஆரவல்லி  மலைகளை சட்ட விரோத சுரங்க கும்பல்களிடம் இருந்து பாதுகாக்க ராஜஸ்தான் அரசு தவறி விட்டது. இந்த பிரச்னையை ராஜஸ்தான் அரசு மிக லேசாக எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.    தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்க இந்த மலைகள் மாயமானதும் காரணமாக உள்ளது. இதனால், டெல்லியில் லட்சக்கணக்கானோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை  உள்ளது. எனவே, ஆரவல்லியில் 115.34 ஹெக்டேரில்  செயல்படும் சட்ட விரோத சுரங்கங்களை அடுத்த 48 மணி நேரத்தில் மூட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை  செயல்படுத்தி, ஒரு வாரத்தில் மாநில தலைமை செயலாளர் வாக்குமூலம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: