ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழு விசாரணை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் ஆய்வுக்குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், அதன் விசாரணை குழுவுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில்  உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை போலீசார் சுட்டதில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அரசாணை பிறப்பித்து ஆலை  அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. அரசின் உத்தரவுக்கு  எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆலை தொடர்பாக தமிழக அரசு  தெரிவிக்கும் பாதிப்பு உண்மைதானா என்பது குறித்து ஆய்வு செய்ய, மேகாலயா ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு புதிய குழு அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த  செப்டம்பர் 23ம் தேதி ஆலையை முழுவதுமாக ஆய்வு நடத்தியுள்ளது. இதில், ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வாய் மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் அளித்துள்ளனர். ஆலை  தொடர்பான முழு அறிக்கையையும் விரைவில் சிறப்பு குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஆய்வுக் குழுவுக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்கான கெடு வரும் 30ம் தேதியோடு முடிவடையும் நிலையில், ‘ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வுக்கு மேலும் அவகாசம் வழங்க வேண்டும்’  என,  சிறப்புக் குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று தேசிய பசுமை தீர்ப்பாய தலைமை ஆணையர் ஏ.கே.கோயல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வால் கேட்டுக் கொண்டதின் பேரில், வரும் நவம்பர் 30ம் தேதி வரை, விசாரணைக்காக ஒரு மாதம் கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. அந்த  காலக்கெடுவுக்குள் விசாரணை குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீதான விசாரணை வருகிற டிசம்பர் 10ம் தேதி நடக்கும் என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: