சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து பந்தளம் மன்னர் குடும்பம் போராட்டம்: நடிகர் சுரேஷ் கோபி, பிரபலங்கள் பங்கேற்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள அரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய கோரி, பந்தளம் மன்னர் குடும்பத்தினர் திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு நாம ஜெப போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக கேரளாவில் நாளுக்கு நாள் போராட்டம் வலுத்து வருகிறது. தினசரி ஆர்ப்பாட்டங்களும், கண்டன பேரணிகளும் நடைபெற்று வருகின்றன. பாஜ கூட்டணி சார்பில் 2 நாட்களுக்குமுன் தொடங்கிய நீண்ட தூர பேரணி 15ம் தேதி திருவனந்தபுரம் தலைமை செயலகத்தை அடைகிறது. அதேபோல், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் தொடங்கிய பேரணி 14ம் தேதி திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் வீடு வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், ஐயப்ப தர்ம பாதுகாப்பு அமைப்பு சார்பில் நேற்று திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு நாமஜெப போராட்டம் நடந்தது. பந்தள மன்னர் குடும்ப நிர்வாக குழு தலைவர் சசிகுமார வர்மா தலைமை வகித்தார். இதில் பந்தள மன்னர் கேரள வர்ம ராஜா, மன்னர் குடும்பத்தை சேர்ந்த தீபா வர்மா, சுரேஷ் கோபி எம்பி, சிவகுமார் எம்எல்ஏ., பாஜ என்ஆர்ஐ பிரிவு ஷில்பா நாயர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இதில், சசிகுமார வர்மா பேசுகையில்,  ‘‘உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 10க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மீது தீர்ப்பு வந்த பிறகே சபரிமலையில் பெண்களை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலை ஆகம விதிகளை எந்த காரணத்தை கொண்டும் மாற்ற முடியாது. கேரள அரசும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றார்.

நிலைக்கல், பம்பையில் இளம் பெண்களை தடுக்க திட்டம்

நிலைக்கல் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பல்வேறு இந்து அமைப்பினர் குடில் கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். சபரிமலை ஆச்சார பாதுகாப்பு குழு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 17ம் தேதி கோயில் நடை திறப்பதற்கு முன்பாக இந்த போராட்டத்தில் மேலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இளம்பெண்கள் வந்தால் தடுக்க திட்டமிட்டுள்ளனர்.

17ம் தேதி நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 18ம் தேதி காலை சபரிமலை மற்றும் மாளிகைபுறம் கோயில்களில் புதிய ேமல்சாந்தி தேர்வு நடக்கிறது. 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை கணபதி ஹோமம், உஷ பூஜை உட்பட வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜைகளான படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது. தினமும் காலை 5.30 மணி முதல் 10 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கிறது. 22ம் தேதி ேகாயில் நடை சாத்தப்படும்.

பாதியில் நிற்கும் பணிகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலம் தொடங்க ஒரு மாதமே உள்ளது. சமீபத்தில் கேரளாவில் மழை காரணமாக பம்பையிலும் சபரிமலையிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

பம்பையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியபோதிலும் 25 சதவீத பணிகள் கூட முடியவில்லை. பம்பையில் கழிப்பறைகள், குளிக்க வசதி எதுவும் செய்யப்படவில்லை. சபரிமலை செல்லும் சாலைகள் அனைத்தும் மோசம் அடைந்துள்ளன. இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தொடங்கப்படவில்லை. இதனால் இந்த ஆண்டு மண்டல காலத்திற்கு வரும் பக்தர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: