ஆதீனத்தின் கோயிலில் புஷ்கர முக்கிய விழா

துறவிகள் தாங்கள் மேற்கொள்ளும் சங்கல்பத்தை ஒருநாளும் மீறுவதில்லை. காஞ்சி மடத்தின் மகா பெரியவர் மாபெரும் தீர்க்கதரிசி. இறையருள் நிரம்பப் பெற்றவர். ஒருமுறை அவர் தனது விரதத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டது. அதையும் இறைவனின் திருவிளையாடல் என்றார் அவர். எப்படி தெரியுமா?

ஒரு சமயம் மகா பெரியவர் வழக்கம்போல் மவுன விரதம் இருந்து கொண்டிருந்தார். அன்று பார்வையிழந்த மாணவர்கள் பலர் தங்களது ஆசிரியருடன் சங்கர மடத்திற்கு வந்தனர். சுவாமி தரிசனம் முடிந்ததும் மகா பெரியவரின் அருளாசி வேண்டி நின்றனர். அவரும் தன்னிரு கைகளை உயர்த்தி மாணவர்களை ஆசீர்வதித்தார். சுவாமி மவுன விரதம் இருப்பதை அறியாத ஆசிரியர் ஒரு விண்ணப்பம் வைத்தார்.

‘சுவாமி, நான் அழைத்து வந்திருக்கும் மாணவர்கள் விழி இழந்தவர்கள். நீங்கள் கைகள் உயர்த்தி ஆசீர்வதித்ததை காணும் பாக்கியம் இல்லாதவர்கள். ஆகவே நீங்கள் அவர்களின் செவி குளிர வாழ்த்த வேண்டும்’ என்றார் நொடியில் தன் விரதம் கலைத்த மகா பெரியவர் வந்திருப்பவர்கள் அனைவரையும் மனதார, திருவாய் மலர்ந்து வாழ்த்தினார். மவுன விரதம் கலைந்ததை இறைவனின் திருவிளையாடல் என்று கூறி மகிழ்ந்ததாக திருவாவடுதுறை 23 வது குருமகா சன்னிதானம்  அடிக்கடி பெருமையுடன் குறிப்பிடுவார். காவிரி பாயும் சோழ நாட்டில் மூவலூரில் பிறந்த நமச்சிவாயர் ஏற்படுத்திய திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பாண்டிய நாட்டில் பொருநை நதி பாயும் பகுதியில் தான் மிகுதியான நிலங்கள் உள்ளன.

அவ்வாறே பொருநை நதி பாயும் தென்பாண்டி நாட்டில் பிறந்த அதாவது ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த குருஞான சம்பந்தர் ஏற்படுத்திய தருமபுர ஆதீனத்திற்கு காவிரி பாயும் சோழ வள நாட்டில் தான் மிகுதியான நிலங்களும் கோயில்களும் உள்ளது. திருவாவடுதுறை 23வது குருமகா சன்னிதானம் சாதாரண குடிமக்களுக்கு மட்டுமல்ல தங்கள் அருகில் உள்ள மடத்திற்கும் உதவ தயங்குவது இல்லை. தென்பாண்டி நாட்டில் தொன்மையான மடங்களுள் பெருங்குளம் ஆதீனம் ஒன்றாகும். இம்மடம் தாமிரபரணி நதிக்கரையில் நவ திருப்பதி அமைந்த பெருங்குளம் கிராமத்தில் உள்ளது. இம்மடம் குருமகான் இன்றி நலிவுற்ற நிலையில் இருந்தது.

அப்போது அன்பர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று, துறவில் ஈடுபட்ட ஒருவரைச் சிவப்பிரகாச சுவாமிகள் துறவியர்க்குரிய பயிற்சி தந்து மடாதிபதியாக நியமித்தார். அவர் பெயர் கலியாண சுந்தர சத்தியஞான பண்டாரச் சந்நதியாகும். அவர் பரிபூரணமடைந்தவுடன் தற்போது அங்கு சிவபிரகாச சத்திய ஞான பண்டாரச் சந்நதிகள் பணியாற்றி  வருகிறார்கள். திருவாவடுதுறையில் தினமும் 3 வேளையும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. அதேபோலவே அதன் கிளைமடங்களான காசி, கன்னியாகுமரி, கல்லிடைக்குறிச்சி, சுசீந்திரம், நெல்லை, மதுரை, திருவானைக்காவல், திருவதிகை, சிதம்பரம், சிவந்திபுரம், மேக்கரை, திருச்செந்தூர் பகுதியிலும் நண்பகல் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமாக அருள்மிகு விநாயகப் பெருமான் திருக்கோயில்கள் 50க்கு மேற்பட்டு விளங்குகின்றன.

அவற்றில் தாமிரபரணி கரையில் உள்ள பாபநாசம் அருள்மிகு பொதிகையடி விநாயகர், கல்லிடைக்குறிச்சி அருள்மிகு நினைத்ததை முடிக்கும் விநாயகர், அம்பலவாணபுரம் உழக்கரிசி பிள்ளையார், விக்கிரம சிங்கபுரம் அருள்மிகு அரிய விநாயகர், முறப்பநாடு அருள்மிகு அன்னதான விநாயகர், திருநெல்வேலி சந்தி விநாயகர், திருச்செந்தூர் சக்தி விநாயகர் உள்பட 24 கோயில்களில் 23வது திருவாவடுதுறை குருமகாசன்னிதானம் சீர்வளர் சிவபிரகாச தேசிக சுவாமிகள் காலத்தில் கும்பாபிசேகம் நடந்துள்ளது. நெல்லை சந்தி பிள்ளையார் கோயிலில் இரண்டு முறை கும்பாபிசேகம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆதீனத்திற்கு சொந்தமான தாமிரபரணிக்கரையில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலில்தான் தாமிரபரணி புஷ்கரத்தின் முக்கிய விழா நடக்கிறது. அம்பை அருகே ஊர்காடு கிராமத்தில் கோடீஸ்வரர் உருவானது தெரியுமா?

(நதி வற்றாமல் ஓடும்)

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: