பிரதமர் மோடி ஆவேச பேச்சு நாட்டை அரிக்கும் வாக்கு வங்கி அரசியல்

போபால்: ‘‘எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் மக்களவை தேர்தலில் தாமரைதான் மலரும்’’ என்று காங்கிரசுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக ஊழல் புகார்  தெரிவித்து வருகிறார். இருப்பினும், மோடி எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.  இதில், பாஜ தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ஊழல் குற்றச்சாட்டு கூறி வரும் காங்கிரசுக்கு பதிலடி கொடுத்து பிரதமர் மோடி பேசியதாவது: காங்கிரஸ் அதிகாரத்தை  இழந்ததும் தன்னுடைய நிலையையும் இழந்து விட்டது. அவர்களிடம் இப்போது எதுவும் கிடையாது. காங்கிரஸ் எவ்வளவுதான் சேற்றை வாரி வீசினாலும் தாமரை மலர்ந்து கொண்டேதான்  இருக்கும். ஏனெனில், அவர்கள் கண்ணுக்கு எளிதாக சேறு மட்டுமே தெரிகிறது. அதனால்தான் வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்பான வாதங்களை விட்டுவிட்டு சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

சிறிய கட்சிகளிடம் கூட்டணிக்காக பிச்சையெடுக்கும் நிலைக்கு 125 ஆண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸ் சுருங்கி விட்டது. அப்படியே கூட்டணி அமைந்தாலும், அது வெற்றிகரமாக  ஒருபோதும் அமையப்போவது இல்லை.  காங்கிரஸ் உள்நாட்டில் கூட்டணி அமைப்பதில் தோல்வியை தழுவிவிட்டது, எனவே, இந்தியாவிற்கு வெளியே கூட்டணி அமைக்க பார்க்கிறது. இந்திய  பிரதமரை உலகமா தேர்வு செய்கிறது?. அதனால்தான், அவர்கள் சேற்றை வாரி இறைக்கிறார்கள். இதற்கு முன் இதுபோன்ற வேலையைத்தான் செய்தார்கள். இப்போதும் அதையே தான்  செய்கிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக் கொள்வது ஒன்றுதான். மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மட்டுமல்ல, அடுத்து வரும் மக்களவை தேர்தலிலும் பாஜதான் வெற்றி பெறும்.  தாமரைதான் மலரும்.

இந்தியாவின் மேம்பாட்டுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். வாக்கு வங்கி அரசியல் நம்முடைய சமூகத்தை கரை யான்கள்போல் அரித்து வருகின்றன. வாக்கு வங்கி அரசியலை  இந்தியாவை விட்டு அகற்றுவதுதான் எங்களுடைய லட்சியம்.  மத்தியில் இப்போது ஆட்சியில் உள்ள பாஜ.வின் நம்பிக்கை என்னவென்றால், இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்றால்  அனைத்து மாநிலங்களும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதே. மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தாலும் அதற்கான காரணங்களை ஆராய காங்கிரஸ் நினைக்கவில்லை. இந்த நாட்டிற்கு  காங்கிரஸ் கட்சி சுமையாக உள்ளது. எனவே, ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரசிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பாஜ தொண்டனுக்கும் உண்டு.இவ்வாறு அவர்  ஆவேசமாக பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: