செல்போன் திருடியதாக கூறி மரத்தில் கட்டி வைத்து வாலிபர் அடித்து கொலை: வேலூர் அருகே பயங்கரம்

வேலூர்: கே.வி.குப்பம் அருகே செல்போன் திருடியதாக வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் பூச்சிக்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அதே ஊரை சேர்ந்த விமல் உட்பட அவரது நண்பர்கள் 3 பேர் வீட்டில் இருந்த  சங்கரை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள மாமரத்தில் கட்டி வைத்து செல்போன் திருடியதாககூறி அவரை சரமாரியாக கட்டையால் அடித்து உதைத்துள்ளனர்.

ஏற்கனவே சங்கர் நோயாளி என்பதால் அவரால் வலி தாங்க முடியாமல் கதறினார். ஒரு கட்டத்தில் சங்கர் மயங்கி கீழே சரிந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த 4 பேரும், சங்கரை தோளில் தூக்கிக்கொண்டு அவரது வீட்டில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கரின் தாய் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து சங்கரை பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக கே.வி.குப்பம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய விமல் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சடலத்தை கே.வி.குப்பம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் எல்லை பிரச்னை

மேல்மாயில் பூச்சிக்கான்பேட்டையை சேர்ந்த ஒரு விவசாய நிலத்தில் உள்ள மாமரத்தில் சங்கரை கட்டி வைத்து அடித்துள்ளனர். அந்த இடம் பனமடங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாகும். வீசிவிட்டு சென்ற வீடு கே.வி.குப்பம் காவல்நிலையத்துக்கு உட்பட்டது. இதனால் எல்லை பிரச்னை ஏற்பட்டது. இரு காவல் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், மாறி மாறி தங்களது காவல் நிலைய எல்லை இல்லை எனக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: