பெயருக்கு கால்வாய் சீரமைப்பு பணி.. கடத்தப்படுவதோ செம்மண்..

* மாடம்பாக்கத்தில் லாரி லாரியாக விற்பனை ஜோர்

* ஒரு லோடு 3500க்கு விற்கும் ஒப்பந்ததாரர்கள்

தாம்பரம்: மாடம்பாக்கம் பகுதியில் உள்ள ஏரி உபரி நீர் கால்வாயில் சீரமைப்பு பணி என்ற பெயரில், இரவு பகலாக செம்மண் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு  எழுந்துள்ளது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள சேலையூர் ஏரியின் உபரிநீர், தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து வரும் மழைநீர், திருவஞ்சேரில் இருந்து வரும் மழைநீர் என அனைத்தும் மாடம்பாக்கம் பேரூராட்சிக்கு  உட்பட்ட 8வது வார்டு, சீரடி சாய் நகர் பகுதியில் உள்ள உபரிநீர் கால்வாய் வழியாக சென்று மாடம்பாக்கம் ஏரியில் கலந்து வந்தது.இந்நிலையில், ஆக்கிரமிப்பு வீடுகள் அதிகரித்ததால் இந்த கால்வாய் குறுகி, மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சுற்றுப்பகுதி குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், மாடம்பாக்கம் பேரூராட்சி சார்பில் ₹1.25 கோடியில் கால்வாயை தூர்வாரி சீரமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஆளும்கட்சினர் உட்பட சில அரசியல் கட்சியை சேர்ந்த 5  ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். ஆனால், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல், பெயரளவுக்கு கால்வாயை தூர்வாரும் பணி நடைபெறுகிறது. வழக்கமாக, கால்வாயை தூர்வாரும்போது, எடுக்கப்படும் மண்ணை கரைகளை  பலப்படுத்த பயன்படுத்துவர். ஆனால், ஒப்பந்தம் பெற்றுள்ள ஆளும்கட்சினர், கால்வாயில் இருந்து தோண்டி எடுக்கப்படும் செம்மண்ணை லாரிகளில் கடத்தி சென்று, ஒரு லோடு ₹3500 என விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், கால்வாய் சீரமைப்பு பணியைவிட செம்மண் கடத்தப்படும் பணிதான் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் இவற்றை  கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி சீரமைக்க வேண்டும், என அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், ஆக்கிரமிப்புகள்  அகற்றப்படாமல், தூர்வாரும் பணி மட்டும் நடக்கிறது. அதில், கால்வாயில் இருந்து தோண்டி எடுக்கப்படும் செம்மண்ணை ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் இரவு பகலாக லாரிகளில் கடத்தி சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார்  அளித்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: