ரபேல் ஒப்பந்தத்துக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும்படி கூறியது இந்தியாதான் : பிரான்ஸ் முன்னாள் அதிபர்

புதுடெல்லி: ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும்படி கூறியது இந்தியாதான்’’ என அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார்.கூட்டுத் தயாரிப்பில் விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை ₹58 ஆயிரம் கோடிக்கு வாங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் ஏப்ரல் 10ம் தேதி, அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேவை சந்தித்தபின் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து, ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் கூட்டுத் தயாரிப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் கட்சி, அரசு நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனத்தை பரிந்துரைக்காமல், தொழிலதிபர் நண்பர் அனில் அம்பானி ஆதாயம் அடைவதற்காக, விமான தயாரிப்பில் முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் பரிந்துரைக்கப் பட்டதாக அது கூறியது. கூட்டு தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனத்தை தேர்வு செய்ததில் மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை என பாஜ மறுத்து வந்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்த பேட்டி, பிரான்ஸ் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. அதில் ஹாலண்டே கூறுகையில், ‘‘டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் கூட்டு தயாரிப்பில் ஈடுபட ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்யும்படி கூறியது இந்திய அரசுதான். இந்திய நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு பிரான்சுக்கு அளிக்கப்படவில்லை. நமக்கு கொடுக்கப்பட்ட நிறுவனத்தை பங்குதாரராக சேர்த்தோம்’’ என கூறியுள்ளார். இத்தகவலால் ரபேல் போர் விமான ஒப்பந்தம் சர்ச்சை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதை வைத்து மோடி அரசு மீது தாக்குதல் நடத்த எதிர்க்கட்சிகள் தயாராகிவிட்டன.

‘நாட்டுக்கு மோடி துரோகம்’

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் விடுத்துள்ள பதிவில், ‘ரபேல் விமான ஒப்பந்தத்தை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி மாற்றியுள்ளார். இந்த ஒப்பந்தம் ரகசியமாக நடந்துள்ளது. இத்தகவலை வெளியிட்ட பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டேவுக்கு நன்றி. நொடித்து போன அனில் அம்பானிக்கு கோடிக்கணக்கான மதிப்புள்ள ஒப்பந்தம் கிடைக்க பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் உதவியுள்ளார் என்பது நமக்கு இப்போது தெரிகிறது. நாட்டுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்து விட்டார். நமது வீரர்கள் சிந்திய ரத்தத்தை அவர் அவமதித்து விட்டார்’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: