வாடகை கேட்டவர் வெட்டிக் கொலை : மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: வாடகை கேட்டவரை கொலை செய்த வழக்கில் மீன் கடை ஊழியருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அசோக்நகர் பெரியார் பாதையில் மீன் கடை நடத்தி வருபவர் சேது. இவரது கடையில் பாபு, ராமச்சந்திரன், உலகநாதன் ஆகியோர் வேலை பார்க்கிறார்கள். கடந்த 2012 அக்டோபர் 28ம் தேதி கடையின் வாடகை வசூல் செய்வதற்காக கிருஷ்ணகுமார், அவரது தம்பி ஜெயக்குமார் மற்றும் பிரபாகரன் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது, கடையில் இருந்த உலகநாதன், எப்போ பார்த்தாலும் உங்களுக்கு வாடகைதான் என்று சத்தம்போட்டு கையில் வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் கிருஷ்ணகுமார் கழுத்தில் வெட்டினார். இதில் அவர் கீழே விழுந்தார்.அப்போது பாபு, பிரபாகர் ஆகியோர் உலகநாதனை தடுக்க முயன்றபோது அவர்களை உலகநாதன் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். வெட்டுப்பட்ட கிருஷ்ணகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கு 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பெஞ்சமின் ஜோசப் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வக்கீல் டீக் ராஜ் மற்றும் அவருக்கு உதவியாக வக்கீல் பாக்கியராஜ் ஆகியோர் ஆஜராகினர். அரசு வக்கீல் சாட்சி விசாரணையின்போது, சம்பவம் நடந்தபோது கடையில் இருந்த பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறினர்.இறந்துபோன கிருஷ்ணகுமாரின் தம்பி ஜெயக்குமார் நேரடி சாட்சியம் அளித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பில், கிருஷ்ணகுமாரின் கழுத்தில் ஒரே ஒரு வெட்டு மட்டுமே உள்ளது. அவரை தாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் உலகநாதன் வெட்டியுள்ளதாக சாட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. கொலை செய்யும் எண்ணத்துடன் உலகநாதன் செயல்பட்டார் என்று அரசுத் தரப்பு நிரூபிக்கவில்லை. எனவே, கொலை செய்யும் நோக்கத்துடன் இந்த கொலை நடைபெறவில்லை என்பதால் உலகநாதனுக்கு இந்த நீதிமன்றம் 5 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ₹1000 அபராதமும் விதிக்கிறது என்று தீர்ப்பளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: