வளர்ச்சிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இபிஎஸ்.சும், ஓபிஎஸ்.சும் கட்சியை அழிக்கின்றனர்: அதிமுக எம்எல்ஏ சண்முகநாதன் ஆவேசம்

தூத்துக்குடி: ‘‘எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கட்சியை காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல்  அழிவுப்பாதைக்கு கொண்டு சென்று விட்டனர்’’ என்று முன்னாள் அமைச்சரும், வைகுண்டம் தொகுதி  எம்எல்ஏ.வுமான சண்முகநாதன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி, மேலூர் கூட்டுறவு வங்கி  தேர்தல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டு நேற்று முன்தினம் நடந்தது. இதில்  அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள் ஒரு தரப்பாகவும், முன்னாள் அமைச்சர்  எஸ்பி சண்முகநாதன்  ஆதரவாளர்கள் மற்றொரு தரப்பாகவும் போட்டியிட்டனர். 5  பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 6 இடங்களுக்கு மட்டுமே தேர்தல்  நடந்தது. பின்னர் சண்முகநாதன் எம்எல்ஏ, தூத்துக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதா மறைவிற்கு பின்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.  கூட்டுறவு தேர்தல் அறிவித்தபோது தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினர், தலைவர்கள் யாராக இருந்தாலும் தொந்தரவு செய்யக் கூடாது. மற்றவர்கள் இருக்கும் இடங்களில் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும் என கட்சி  மேலிடம் கூறியிருந்தது.

ஆனால், தற்போது இருக்கும் நிர்வாகிகளான அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தற்போது அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னதுரை ஆகியோர் கட்சியை அழித்து  வருகின்றனர்.இவர்களுக்கு துணையாக இருப்பது தளவாய் சுந்தரம். அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கட்சியை அழித்து விட்டார். அங்கு அதிமுகவிற்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அடுத்து நெல்லை மாவட்டத்திலும் கட்சியை  அழித்து விட்டு தற்போது தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்துள்ளார். இதை தலைமை தான் கண்காணிக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை தலைமையில் புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சியை வலுவாக்க நல்ல முடிவை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் ஆட்சியை கட்டுக் கோப்போடு நடத்தி வருகின்றனர். ஆனால், கட்சியை  அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று விட்டனர். ஓபிஎஸ் தரப்பில் மனோஜ் பாண்டியன் சொல்வதை கேட்கின்றனர். எடப்பாடி தரப்பில் தளவாய் சுந்தரம் பேச்சை கேட்கின்றனர். அவர்கள் இந்த 3 மாவட்டத்திலும் கட்சியை அழித்து  விட்டனர்.

கடந்த 1972ல் அதிமுக ஆரம்பித்த போதே நான் கட்சியில் இருக்கிறேன். 100 ஆண்டுகள் இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா எண்ணினார். அதற்காகவே நான் உழைத்து வருகிறேன். ஆனால், ஓபிஎஸ்,  இபிஎஸ் கட்சியில் கவனம் செலுத்தவில்லை. அங்கு சென்று விடுவார்களோ, இங்கு சென்று விடுவார்களோ என பதற்றத்தில் இருக்கின்றனர். தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 3 பேரின் பேச்சை கேட்டால் இந்த கட்சி அழிந்துவிடும்.  மேலிடத்திற்கு நான் தெரிவிக்கும் புகார் இதுதான். வேறு எங்கும் தெரிவிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்

பின்னணி என்ன?

தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி  தேர்தலில்  அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆதரவாளர்கள் ஒரு தரப்பாகவும், முன்னாள் அமைச்சர்  எஸ்பி சண்முகநாதன் ஆதரவாளர்கள் மற்றொரு தரப்பாகவும் போட்டியிட்டனர். இதில் 5  பேர்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 6 பேருக்கு மட்டுமே தேர்தல்  நடந்தது. இந்த 6 பேரில் ஏசாதுரை உள்ளிட்ட இருவர் மட்டுமே எஸ்பி சண்முகநாதன் ஆதரவாளர்கள். மற்ற 4 பேரும் மாவட்ட செயலாளரால்  நிறுத்தப்பட்டவர்கள். எனினும், இந்த 4 பேரும் எஸ்பி சண்முகநாதன் அணிக்கு தாவியதாக கூறப்படுகிறது. இதனால், எஸ்பி சண்முகநாதன் தரப்பினர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

 எனவே, தனது தரப்பைச் சேர்ந்த ஏசாதுரையை தலைவர் பதவியில் அமர்த்தலாம் என எஸ்பி சண்முகநாதன் கணக்கு போட்டார். இது எதிர் கோஷ்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற  இருவரை எதிர்தரப்பு திடீரென தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இப்படி ஆளும் கட்சியான அதிமுக.வினரே இரு கோஷ்டிகளாக எலியும், பூனையுமாக மோதியதால் தான் எஸ்.பி.சண்முகநாதன் சூடாகி விட்டார். அதன் பிறகே  இவ்வாறு பேட்டி அளித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: