மன அழுத்தத்தைக் கையாளும் எளிய வழி!

நாம் ஒவ்வொரு நாளும் எத்தனையோ முகங்களைப் பார்க்கிறோம். அவற்றில், எத்தனை முகங்களில் சிரிப்பையோ, சிறு புன்னகையையோ பார்க்க முடிகிறது? ஏன் முகங்களில் இத்தனை இறுக்கம்?ஒரு நாளில் எத்தனை முறை மகிழ்ச்சியாக மனம் விட்டு சிரிக்கிறீர்கள்? எத்தனை முறை கோபம் / பதற்றம் / பயம்/ கவலை கொள்கிறீர்கள்?‘இவ்வுலகில் எனக்கு எந்த பிரச்னையுமே இல்லை’ எனச் சொல்லும் யாராவது ஒருவரை இதுவரை நீங்கள் சந்தித்ததுண்டா?தொந்தரவுகள், ஏமாற்றங்கள், காலக்கெடுக்கள் என எல்லாம் கலந்ததாகவே உள்ளது நம் அன்றாட வாழ்க்கை…

இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்… என்ன தீர்வு என்பதை இங்கே பகிர்ந்துகொள்கிறார் உளவியல் ஆலோசகரான சித்ரா அரவிந்த்.‘‘மன அழுத்தம் என்பது வயது, கல்வி, வேலை என்று எந்த பாரபட்சமு மில்லாமல் எல்லோரையும் அசைத்துப் பார்க்கக் கூடிய வலிமையான ஒன்று. பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு படிப்பு, ஆரோக்கியமற்ற குடும்பச் சூழல், இணக்கமில்லாத சக மாணவர்கள் போன்றவை பிரச்னை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார்கள். டீன் ஏஜ் குழந்தைகளோ பாடத்திட்டப் பளுவுடன் அவர்களின் வயதுக்குரிய விஷயங்களான காதல், தோற்றம், புரிந்து கொள்ளாத பெற்றோர், ஆசிரியர், கேலி செய்யும் நண்பர்கள் என பல்வேறு விஷயங்கள் தினம் தினம் தாக்குவதாகச் சொல்கிறார்கள்.

வேலைக்குச் செல்வோரோ அதிக வேலைப்பளு, மோசமான சூழல், குறைந்த சம்பளம், நிரந்தரமற்ற வேலை, இணக்கமற்ற மேனேஜர், சக ஊழியர்கள், சலிப்பு தட்டும் வேலைத் தன்மை, விருப்பமில்லாத வேலையைப் பார்ப்பது என பல விஷயங்கள் பிரச்னை அளிப்பதாகக் கூறுகிறார்கள். வெளியில் செல்கிறவர்களுக்குத்தான் இவ்வளவு பிரச்னை என்றால், வீட்டிலேயே இருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு பிரச்னை இல்லையா என்ன?

புகுந்த வீட்டினருடன் சுமுக உறவு இல்லாதது, அதனால் சண்டை சச்சரவுகள், குடிகார கணவன், அனுசரித்துப் போகாத கணவன், தொந்தரவு கொடுக்கும் பிள்ளைகள், வேலைக்காரி பிரச்னை எனப் பல்வேறு சிக்கல்களை சந்திப்பதாகச் சொல்கிறார்கள். முதியோர்களோ நலிந்து வரும் உடல்நலம், பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை, வீட்டுச்சூழல், போதிய பணமின்மை, தனிமை, வெறுமை, கணவன்/மனைவியின் மரணம், எப்போதும் ‘சும்மா’வே இருக்க வேண்டிய நிர்பந்தம், தங்கள் கருத்தை யாரும் மதிப்பதில்லை என்ற உறுத்தல், கடைசி காலம் குறித்த பயம் போன்றவை தொந்தரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். பிரச்னைகளின் காரணிகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். ஆனால், அந்தப் பிரச்னைகளைச் சமாளிக்க முடியாமல், நவீன வாழ்க்கை முறையில் மன அழுத்தத்துக்கு ஆளாகாதவர்களை பார்ப்பது மிக அரிது.

மன அழுத்த அறிகுறிகள்

அதீத மன அழுத்தம், கடுமையான உடல் மற்றும் மனநல பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு, பாதிக்கப்பட்டவரின் வீட்டிலும் அலுவலகத்திலும் தனிப்பட்ட உறவுகளையும் பாதிக்கும். மன அழுத்தத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை உணரும் முன்பே இது பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தி விடும். தினம் தினம் பழகிப் போவதால் மன அழுத்தத்தின் அறிகுறிகள் வித்தியாசமாக தெரியாது, நாம் அறியாமலேயே நம்முள் படர்ந்து விடும். மன அழுத்தத்தின் அளவு கட்டுப்பாடின்றி போகும்போது, அதை முன்கூட்டியே அறிந்து கொள்வது மிகவும் அவசியம். பொதுவான அறிகுறிகள் இவை...

அறிவுத் திறன் சார்ந்த அறிகுறிகள்

1. ஞாபகமறதி

2. கவனம் செலுத்த முடியாத நிலை

3. முடிவெடுக்க முடியாத நிலை

4. கெட்ட விஷயத்தை / எதிர்மறை

விஷயத்தை மட்டுமே பார்ப்பது

5. பதற்றமான / வேகமான எண்ணங்கள்

6. எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதில் சிரமம்

7. பிரச்னையை மறக்க முடியாத நிலை (திரும்பத் திரும்ப மனதில் சஞ்சலம் / குழப்பம்).

உணர்வு சார்ந்த அறிகுறிகள்

1. அதிக கவலை (அழ வேண்டும்

போலிருத்தல்)

2. எரிச்சல் / கோபம்

3. ஓய்வெடுக்க இயலாமை

4. அதிக உணர்ச்சிவசப்படுதல்... சம்பந்தமில்லாத உணர்வுகளை சம்பந்தமில்லாத இடத்தில் வெளிப்படுத்துதல் (காரணமற்ற கோபம்)

5. தனிமையாக உணர்தல்

6. மனச்சோர்வு, பொதுவாக மகிழ்ச்சியின்மை.

உடல் சார்ந்த அறிகுறிகள்

1. வலிகள் (தலைவலி, கழுத்துவலி, மார்புவலி)

2. வயிற்றுப்போக்கு/ மலச்சிக்கல்

3. அதிக இதய துடிப்பு

4. பாலியலில் நாட்டமின்மை

5. அடிக்கடி சளி பிடித்தல்.

செயல்பாடு சார்ந்த அறிகுறிகள்

1. அதிகமாக / குறைவாக சாப்பிடுதல்

2. அதிகமாக / குறைவாக தூங்குதல்

3. தனிமையை நாடுதல்

4. வேலையைத் தள்ளிப்போடுதல் / பொறுப்பை தட்டிக் கழித்தல்

5. ரிலாக்ஸ் ஆவதற்கு குடி, சிகரெட் / போதை மருந்து உபயோகித்தல்

6. நகத்தை கடிக்கும் பழக்கம்/ பற்களைக் கடிக்கும் பழக்கம்

7. உறவுகளோடு தகராறு

8. வழக்கத்தை விட வேகமாக பேசுதல்.

சிகிச்சை பெறும் விழிப்புணர்வு வேண்டும்

பொதுவாக மன அழுத்தத்துக்காக யாரும் சிகிச்சை பெற முன் வருவதில்லை. அது முற்றிப் போய், அதனால் ஏற்படும் உடல் / மன / குடும்ப உறவு சீர்கேடுகளுக்குப் பிறகே, மன அழுத்தம் திரையின் பின் உள்ளது வெளிச்சமாகிறது. இந்த ‘அமைதியான கொலைகார’னைக் கண்டறிவோம்... பின்னர் அதை வெற்றிகரமாக சமாளிப்போம்.தரப்பட்டுள்ள அறிகுறிகள் பல்வேறு உளவியல் / உடல்ரீதியான பிரச்னைகளாலும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவரிடம் சென்று, தகுந்த ஆலோசனை பெற்ற பின்பே, ‘இது மன அழுத்தம் சார்ந்த அறிகுறி’ என்பதை உறுதி செய்ய முடியும். அறிகுறிகள் அதிக அளவில் இருந்தால் ஆலோசனை பெற வேண்டும். அல்லது மன அழுத்தத்தை குறைக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தைக் கையாள்வது எப்படி?

எல்லோருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஆனால், அதன் அறிகுறிகளை எல்லோரும் உணர்ந்துகொள்வதில்லை. தெரிந்தாலும், மன அழுத்தத்தைக் கையாளும் முறையான வழிமுறைகளையும் பின்பற்றுவதில்லை.

ஆரோக்கியமான வழிகள்…

மன அழுத்தத்தை சமாளிக்க/ குறைக்க சில வழிமுறைகளை பிற்பற்றுவது வழக்கம். அப்படிப் பின்பற்றும் வழிமுறைகளுக்கேற்பவே ஒருவரின் உடல்/மன ஆரோக்கியம் நிர்ணயிக்கப்படுகிறது.

1. நண்பர்களிடம் மனம் விட்டு பேசுதல்

2. ஆதரவான உறவுகளை / நட்பை

ஏற்படுத்திக் கொள்ளுதல்

3. உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துதல்

4. நல்ல சிந்தனைகளை உருவாக்கிக்

கொள்ளுதல்

5. நேரத்தை சரியாகக் கையாளுதல்

6. பிரச்னை வரும் முன்பே அதைக் கணித்து, தயாராக இருத்தல்

7. சரியாக திட்டமிடுதல்

8. தன்னைப் பற்றி உயர்வாக கருதுதல்

9. இறுக்கமான விஷயத்தையும்

நகைச்சுவையுடன் அணுகுதல்

10. ஆரோக்கிய உணவு உட்கொள்ளுதல்...

11. உடற்பயிற்சி / ஏதேனும் விளையாட்டில் ஈடுபடுதல் மற்றும் 6 முதல் 8 மணி நேரம் தூங்குதல்.

12. பிரச்னை ஏற்பட்டால் அதைக் கண்டு விலகாமல் எதிர்கொண்டு, அதன் காரணியை ஆராய்ந்து அதை சரி செய்யும்/ சமாளிக்கும் வழியை தேடிப்பிடித்தல்.

13. தசைகளை தளர்வாக வைத்திருத்தல் (Relaxing Muscles)... தசைகளை ரிலாக்ஸ் செய்யும் செயல்பாட்டில் ஈடுபடுதல்.

ஆரோக்கியமற்ற வழிகள்

தங்களுக்கு மன அழுத்தம் உள்ளது என அறியாமலே அதைச் சமாளிக்க பலர் பின்வரும் வழிமுறைகளை கையாள்வார்கள். இப்பழக்கவழக்கங்கள் ஒருவரிடம் அதிகமாக காணப்பட்டால் அவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் புரிந்து கொள்ளலாம். எப்போது மன அழுத்தம் ஏற்பட்டாலும், அதை குறுக்கு வழியில் சரி செய்ய (எளிதில் தப்பிக்க / தன்னையே மறக்க) தனக்குப் பழக்கப்பட்ட வழிமுறைகளையே மனம் பெரும்பாலும் கையாளும். இதுபோன்ற பழக்கத்துக்கு அடிமையாகி விடுவதும் வழக்கம். உதாரணமாக... பிரச்னை எப்போது வந்தாலும், தங்களை அறியாமலேயே சிலர் அதைச் சமாளிக்க மது அருந்துதல் / தீவிரமாக கணினி பயன்படுத்துதல் (Facebook, computer, games) போன்ற செயல்பாடுகளில் முனைவார்கள்.

1. அதிகரிக்கும் சிகரெட் பழக்கம் / குடிப்பழக்கம் / போதைப் பழக்கம்.

2.டென்ஷனைக் குறைக்க ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்தை அதிகமாக பயன்படுத்துதல்.

3.பிரச்னையிலிருந்து தப்பிக்க தூங்குவது/ தொலைக்காட்சி பார்ப்பது / கணினி

உபயோகித்தல்.

4.அதிகமாக காபி, டீ, சாக்லெட் அல்லது குளிர்பானங்கள் பருகுதல்.

5.தூக்கத்துக்கு மருந்து வாங்கி சாப்பிடுதல்.

6.டென்ஷன் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய பிரச்னைகளுக்காக மருத்துவரை அணுகுதல்.

7.காரணமே இன்றி அதிக செலவு செய்தல்.

இப்படி, பிரச்னையை நேரடியாக அணுகாமல், அதைத் தவிர்க்கும் பழக்கத்தினால், மன அழுத்தத்தை ஏற்படுத்திய உண்மையான பிரச்னை சரி செய்யப்படாமல் அப்படியே இருக்கும். அதைச் சமாளிக்க ஏற்படுத்திக் கொண்ட பழக்கங்களால் பல பக்க விளைவுகளும் ஏற்பட்டு, வாழ்க்கை மேலும் சிக்கலாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

- ஆர்.வி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: