டொரான்டோ: ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரர் ரபேல் நடாலுடன், 19 வயது இளம் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதுகிறார்.அரை இறுதியில் ரஷ்ய வீரர் கரென் கச்சனோவுடன் மோதிய நடால் (ஸ்பெயின்) 7-6 (7-3) என்ற கணக்கில் முதல் செட்டை டை பிரேக்கரில் வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் கச்சனோவின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த அவர் 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 49 நிமிடத்துக்கு நீடித்தது.மற்றொரு அரை இறுதியில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன் (6வது ரேங்க், 32 வயது), கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சிட்சிபாஸ் 6-7 (4-7), 6-4, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் 2 மணி, 48 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பைனலில் அனுபவ வீரர் நடாலுடன், புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சிட்சிபாஸ் மோதுவது டென்னிஸ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.