எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது : மாநிலங்களவையில் காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுகின்றன’’ என மாநிலங்களவை காங்கிரஸ் துணை தலைவர் ஆனந்த் சர்மா குற்றம் சாட்டினார். ஊழல் தடுப்பு சட்ட திருத்த மசோதா மீதான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி ஆனந்த் சர்மா பேசியதாவது: லோக்பால் அமைப்பை மோடி அரசு இன்னும் ஏன் அமைக்கவில்லை என்பதை அறிய விரும்புகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் ஊழல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஐ.மு. கூட்டணி ஆட்சியில் பிரதமர் மீது கூட அடிப்படை ஆதாரமில்லாமல் நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வங்கியில் தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என மக்கள் தற்போது உணரவில்லை. அவர்களின் பணத்தை நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி போன்றோர் நாட்டைவிட்டு வெளியே எடுத்து சென்று விட்டனர். அவர்களுடன் மன்மோகன் சிங் போட்டோ எடுத்துக் கொள்ளவில்லை. இது போன்ற செயல்கள் அவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நிலையில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. சுவிஸ் வங்கியில் இருந்து கருப்பு பணத்தை மீட்போம் என அரசு கூறியது. ஆனால் தற்போது சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதி வேடிக்கையாகிவிட்டது. சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் எல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் ஆளும் கட்சிக்கு ஒரு முறை, எதிர்க்கட்சிக்கு ஒரு முறை என இரட்டை முறை இருக்க முடியுமா? ஆளும் கட்சி முதல்வர்கள் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்க சிபிஐ, அமலாக்கப்பிரிவு போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: