நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க சிபிஐ நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: வெளிநாட்டு நிறுவனத்திற்கு ரூ.3,500 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. எனினும், ஆகஸ்ட் 7ம் தேதி வரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அவரை கைது செய்ய தடை விதித்து  உத்தரவிட்டுள்ளது.  ஸ்ட்ராடெஜிக் கன்சல்டிங் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு கடந்த 2006ம் ஆண்டு நேரடி முதலீடு செய்வதற்கு அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் சுமார் ரூ.3,500 கோடி முதலீடு செய்வதற்கு விதிமுறைகளை மீறி ஒப்புதல் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து தொடர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் இரண்டு முறையும், சிபிஐ அதிகாரிகள் ஒருமுறையும் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். இந்த நிலையில் விசாரணையின் போது தன்னை கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மே 30ம் தேதி டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓபி.சைனி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி வெளியிட்ட உத்தரவில், “சட்டவிரோத நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கிய வழக்கு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்திர்கு முன்ஜாமீன் வழங்க முடியாது. இருப்பினும் இந்த வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதேபோல் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதிக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: