அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவிகளுக்கு அட்டை பெட்டியில் வீடு-மாஜி ராணுவ வீரரின் நேசம்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளியில் ராணுவ வீரர் ஒருவர், சிட்டுக்குருவிகளுக்கு அட்டை பெட்டியில் வீடு கட்டி வைத்து, அவற்றை பாதுகாத்து வருகிறார்.கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குமரன். இவர் அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க, தனது வீட்டில் அட்டை பெட்டிகளில் சிறிய கூடுகள் கட்டி கொடுத்து அவற்றை வளர்த்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:சிட்டுக்குருவி இனம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக, எனது வீட்டில் அட்டை பெட்டிகள் வைத்து குருவிகளை பாதுகாத்து வருகிறேன். சிட்டுக்குருவிகள் 3 முதல் 5 முட்டைகள் இடும். வீட்டு சுவற்றில் இருக்கும் பூச்சிகள், புழுக்கள் மற்றும் தானியங்களை உணவாக சாப்பிடுகிறது. மற்ற பறவைகளை காட்டிலும் இது வீட்டிற்குள் சாதாரணமாக வந்து செல்லும். தொடக்கத்தில் தண்ணீர், உணவு வைத்து பாதுகாத்தேன். பின்பு, அட்டை பெட்டிகளில் கூடு அமைத்து கொடுத்ததால், அவை நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டது. கொஞ்ச நாளில் என்னிடம் நன்றாக பழகிவிட்டது. நாய், பூனைகள் போல் சாதாரணமாக வீட்டுக்குள் வந்து, அனைவரிடமும் நன்றாக பழகி வருகிறது. கதிர்வீச்சு, மரங்கள் அழிப்பு காரணமாக பறவை இனங்கள் அழிந்து வரும் நிலையில், சிட்டுக்குருவிக்கு கூடுகள் அமைத்து அதனை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்….

The post அழிந்து வரும் இனமான சிட்டுக்குருவிகளுக்கு அட்டை பெட்டியில் வீடு-மாஜி ராணுவ வீரரின் நேசம் appeared first on Dinakaran.

Related Stories: