உண்ணாவிரதம் இருந்த டெல்லி துணை முதல்வர், அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக கால வரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர் ஜெயினின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுடன் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் கடந்த ஒருவாரமாக காலவரையற்ற உண்ணாவிரதத்தை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மேற்கொண்டு வந்தார். தொடர்ந்து ஏழு நாட்களாக உணவு உட்கொள்ளாததால் ஏற்கனவே அவருக்கு உடலில் சர்க்கரை அளவு குறைந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மிகவும் சோர்வுற்று காணப்பட்ட ஜெயினின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவர் எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் உடல்நலம் தேறி நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  அமைச்சர் ஜெயின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தகவல் குறித்து கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்து இருந்தார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் பகுதிநேர வேலை நிறுத்தப்ேபாராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப கவர்னர் உத்தரவிட வேண்டும் என கோரி கெஜ்ரிவால் கடந்த வாரம் திங்கள் முதல் கவர்னர் அலுவலகத்தில் உகாத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர்கள்் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோர் இணைந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். 8வது நாளாக இன்றும் அவரது போராட்டம் தொடர்கிறது.

சிசோடியாவும் மருத்துவமனையில் அனுமதி: அமைச்சர் ஜெயினை தொடர்ந்து உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் துணை முதல்வர் சிசோடியாவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 13ம் தேதி முதல் அமைச்சர் ஜெயினுடன் இணைந்து சிசோடியாவும் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சிசோடியாவை நேற்று எல்என்ஜேபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: