சென்னை: கடந்த 13ம் தேதி இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் இதுவரை 100 படங்களுக்கு இசை அமைத்துள்ளதை கொண்டாடும் வகையில் அவரது பிறந்த நாளில் ‘100 ஃபிலிம்ஸ் ஜீ.வி சார்’ என்ற முத்திரை பொறித்த தங்க சங்கிலியை ஜீ.வி.பிரகாஷ் குமாருக்கு பரிசளித்தார் பாடகர் வேல்முருகன். ‘ஆடுகளம்’, ‘சகுனி’, ‘அசுரன்’ உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களில் பல பாடல்களை பாடியுள்ள வேல்முருகன் ஜி.வி.பிரகாஷ் குமார் மீது உள்ள அன்பின் அடையாளமாக அந்த பரிசை தந்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் பேசுகையில், ‘எனக்கு 25 படங்களுக்கு மேல் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து என் வாழ்வில் ஒளியேற்றி வைத்த எனது அன்புக்குரிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நன்றி கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். இன்று நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என்றால் அதற்கு காரணம் அவர் கொடுத்த பாடல் வாய்ப்புகள் தான். அவருக்கு என்னால் எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். அப்போது வேல்முருகனின் மகள் பிரதக்ஷனா, இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனும் உடன் இருந்தனர்.
