ஆண்டவரிடம் நம்பிக்கை வையுங்கள்!

கிறிஸ்தவம் காட்டும் பாதைஉமது நம்பிக்கையே உம்மை மீட்டது. உம் பாவங்கள் மன்னிக்கும் இவர் யார்? அவர்தாம் நம் இயேசு கிறிஸ்து. பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய் பந்தியில் அமர்ந்தார். இதை அறிந்த அந்நகரில் இருந்த பாவியான பெண் ஒருவர், இயேசுவுக்குக் கால்மாட்டில் வந்து அழுது அவருடைய காலடிகளை தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.     இதைக் கண்ட பரிசேயர், ‘‘இவர் ஓர் இறைவாக்கினர் என்றால் தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்.’’ இவள் பாவியாயிற்றே என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். பின்பு, அப்பெண்ணின் பக்கம் இயேசு திரும்பி, சீமோனிடம் ‘‘இவளைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீ என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தாள். நீ எனக்கு முத்தம் கொடுக்கவில்லை, இவளோ நான் உள்ளே வந்தது முதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறாள். சீமோனே நீ எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவளோ என காலடிகளில் நறுமணத் தைலம் பூசினாள். ஆகவே, நான் உனக்கு சொல்கிறேன். இவள் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்கு கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்பு கூருவான் என்றார்.’’ பின்பு இயேசு அப்பெண்ணைப் பார்த்து, ‘‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’’ என்றார்.(லூக்கா 7 : 44 – 48) . இயேசு அவளை நோக்கி’’ உமது நம்பிக்கையே உம்மை மீட்டது. அமைதியுடன் செல்க’’ என்றார்.இவ்வுலக வாழ்க்கையில் நாம் பாவத்தில் புரண்டு கொண்டிருக்கின்றோம். ஆனால் இயேசுவோ நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் காயப்பட்டார், வாதிக்கப்பட்டார். நம்முடைய அக்கிரமங்களின் நிமித்தம் நொறுக்கப்பட்டார். நமக்கு நிறைவாழ்வை அளிக்கவே அவர் தண்டனை ஏற்றார். அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். (எசாயா 53.5) மனிதராகிய நாமோ ஆடுகளைப்போல் வழிதவறி அலைகின்றோம். ஆண்டவரோ நம் ஒவ்வொருவருக்காய் மரணத்தை ருசி பார்த்தார். நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு துக்கங்களைச் சுமந்தார். நாம் பாவி என்று தெரிந்தும் நம்மீது அருளும் இரக்கமும் உடையவர் நம் ஆண்டவர். பாவத்தை விட்டு விலகி அவரிடத்திலே தஞ்சம் புகும் போது நம் பாவத்தை மன்னித்து நம்மை இரட்சித்து தம் இருக்கரங்களாலும் நம்மை கட்டி  அணைப்பவர் நம் ஆண்டவர் ஒருவரே. ‘‘நீதிமான்களை அல்ல, பாவிகளையே மனம்மாற அழைக்க வந்தேன்’’(லூக்கா- 5: 32) பரிசேயரும், மறைநூல் அறிஞரும், ‘‘இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே’’ என்று முணுமுணுத்தனர். அப்போது இயேசு, அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார். அதுதான் காணாமற்போன ஆடு பற்றிய உவமை. உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற்போனால் அவன் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டு பிடிக்கும்வரை தேடிச்செல்லமாட்டாரா? கண்டு பிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக்கொள்வார். வீட்டுக்கு வந்து நண்பர்களையும், அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்’’ என்பார்.அது போலவே மனமாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியைவிட, மனமாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.எனவே நமது காலடிகள் பாவக்கரையிலே வழுவாதப்படிக்கு நம் நடைகளை ஆண்டவரது வழிகளில் ஸ்திரப்படுத்துவோமாக.– ஜெரால்டின் ஜெனிபர்

The post ஆண்டவரிடம் நம்பிக்கை வையுங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: