வாசுகியின் நோய் தீர்த்த வடிவேலன்

அந்தர வெளியில் சுழன்று கொண்டிருக்கும் அண்டகடாகத்தை ஆதார சக்தியும், அச்சக்தியால் தாங்கப்படும் பெரிய ஆமையும், அதன் முதுகின்மீது  அமைந்த எட்டு நாகங்களும், எட்டு யானைகளும் தாங்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன.மேலே சொன்ன எட்டு நாகங்களை, அஷ்டமா நாகங்கள்  என்பர். இந்த எட்டு நாகங்களில் வலிமை பொருந்தியதும், தலை சிறந்ததுமாக விளங்குபவன் வாசுகி என்ற பாம்பரசன். அவன் ஓராயிரம் தலைகளை  உடையவன். அதிக பலம் கொண்டவன்.ஒரு சமயம் சாகா வரத்தைத் தரும் அமுதத்தைப் பெறவேண்டித் தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி மந்திர  மலையை மத்தாகவும், வாசுகி என்ற இந்தப் பாம்பைக் கயிறாகவும், கொண்டு ஓராயிரம் ஆண்டுகள் பாற்கடலைக் கடைந்தனர். இறுதியில் சிவன் அருளால் அமுதமும் பெற்றனர்.பாற்கடலில் அமுதத்தைப் பெற அசுரர்களும், தேவர்களும் மந்திர மலையில் வாசுகி என்ற இந்த  பாம்பைக் கட்டி ஓயாது இழுத்ததால், அதன் உடலெங்கும் புண்ணாயிற்று. அமிர்தத்தையுண்டும் அதற்கு அந்தப் புண்களால் உண்டான வருத்தம்  தீரவில்லை.துன்பத்தால் துவண்டு வருத்திய வாசுகி திருத்தணிகை மலையை அடைந்துத் தவம் செய்தான்.முருகப்பெருமான், அவனுக்குக்  காட்சியளித்தார். அப்பாம்பரசன் முருகப்பெருமானைப் பன்முறை வணங்கி, ‘‘ஐயனே! தேவர்களும் அசுரர்களும் என்னை அழுத்தமாகப் பற்றி முன்னும்  பின்னும் இழுத்ததாலும், அம்மலையில் சிக்குண்டு முன்பின்னாகக் கடையும் போது ஏற்பட்ட உராய்வுகளாலும், என் உடலில் அளவற்ற காயங்கள்  உண்டாகியுள்ளன. அமுதம் அருந்தியும் அது தீரவில்லை.அதுஒரு பக்கமிருக்க நான் கக்கிய விஷம் சிவபெருமானின் கழுத்தில் நீங்காத கறையாகப் படிந்துள்ளது. நான் அத்தகைய அபசாரம் செய்ததைச்  சிவபெருமான் பொருட்படுத்தவில்லையென்றாலும், என் மனதிற்கு அது மிகுந்த துன்பத்தை அளிக்கின்றது அவை தீர அருள்புரிய வேண்டும்,’’ என்று  பன்முறைப் பணிந்து கூறினான்.மகா வைத்தியநாதனாகிய முருகன் அவனை அருகில் அழைத்து அவன் உடலைத் தடவிக் கொடுத்தார். அந்த  அளவிலேயே அவன் உடலிலிருந்த புண்கள் யாவும் சுவடின்றி மறைந்தன.பெருமான், ‘‘வாசுகியே ! தேவர்களின் நலம் பொருட்டு உனது உடல்  புண்ணாகித் தியாகத்தால் வருந்தினாய். தியாகத்தில் பரிசாக உனக்கு அளவற்ற வலிமையைத் தந்தோம்.மேலும், சிவபெருமானுக்கு நஞ்சளித்தது பற்றிக் கவலைப்படாதே. அந்தக் கறை அவர் ஒருவரே என்றும் அழியாது நிலைத்திருக்கும் பரம்பொருள்  என்பதை உலகிற்கு அறிவித்து நிற்கின்றது. அவர் திரிபுர சம்ஹாரம் செய்யும்பொழுது மேருமலையை வில்லாக ஏற்பார். அதன் நாணாக விளங்கி நீ,  மேலும் மேன்மை பெறுவாய், ’’ என்று கூறிப்பல வரங்களையும் தந்து அருட் பாலித்தார்.அன்று முதல் முருகப்பெருமான் நாகத்தின் நோய் தவிர்த்த  நாதன் என்று தமிழிலும், ‘‘நாகவாதனநிவாரணமூர்த்தி,’’ என்று வடமொழியிலும் அழைக்கப்படுகின்றார்.இதனை ஸ்கந்தலஹரி, தணிகைப்  புராணத்திலுள்ள நாகம் அருள் பெருபடலம் ஆகியவை விளக்கமாகக் கூறுகின்றன.– ஆர். அபிநயா

The post வாசுகியின் நோய் தீர்த்த வடிவேலன் appeared first on Dinakaran.

Related Stories: