விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், யோகி பாபு நடித்துள்ள படம், ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. பிரதீப் ரங்கநாதன் தந்தையாக சீமான் நடிக்க, அனிருத் இசை அமைத்துள்ளார். வரும் 10ம் தேதி படம் திரைக்கு வருகிறது. படத்தை பற்றி பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘அனைத்தையுமே நாம் சாட் ஜிபிடியிடம் கேட்க தொடங்கிவிட்டோம். இதனால், மனிதர்களை விட செல்போனை அதிகமாக நம்புகிறோம்.
சில நேரங்களில் அது தவறான தகவல்களை சொல்கிறது. வரும் 2040ல் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க ஒரு செயலி இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் படத்தின் கதை. இப்போது எனக்கும், கிரித்தி ஷெட்டிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை பிடிக்கும் என்று சொன்னால், அந்த டேட்டாவை செயலி பெற்றுக்கொண்டு, ‘நீங்கள் இருவரும் சேர்ந்தால் என்ன?’ என்று அறிவுறுத்துகிறது. டேட்டாவை வைத்துதான் காதல் வருமா? யாருடன் யார் சேர வேண்டும் என்பது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்குமா? இணையத்தில் மார்ஃபிங் செய்த போட்டோக்களை பார்க்கிறோம். அது அதிர்ச்சி அளிக்கிறது. அது சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்க்காமல், உடனே அதை நம்புகிறோம். யதார்தத்தை விட்டுவிட்டு வேறெங்கோ செல்கிறோம். இது எதிர்காலத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்பதை நினைத்து கவலைப்படுகிறேன்’ என்றார்.
