சென்னை: விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடித்துள்ள படம் ‘ஹாய்’. இதன் முதல் நாள் படப்பிடிப்பின்போது நடந்த சம்பவம் குறித்த சுவாரஸ்யமான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நாளில் நயன்தாராவை கட்டியணைத்து கவின் நடிக்க வேண்டுமாம். அந்த காட்சியில் நடிக்க கவின் மிகவும் தயங்கியுள்ளார். காரணம், நயன்தாரா சீனியர் நடிகை. முன்னணி நடிகையாகவும் இருக்கிறார். வளர்ந்து வரும் நடிகரான தான் எப்படி நயன்தாராவை கட்டியணைத்து நடிப்பது என கவின் தயங்கியுள்ளார். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த ஷாட் படமாக்கப்படவில்லை. இயக்குனர் விஷ்ணு எடவன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கவின் அப்படி நடிக்க முடியாமல் தவித்துள்ளார்.
அப்போது ஷாட்டுக்காக ரெடியாகி, நயன்தாரா ஒரு ஓரமாக சேரில் அமர்ந்து மொபைலை நோண்டிக்கொண்டு இருந்தாராம். நேரம் சென்று கொண்டே இருந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு ஏன் தாமதமாகிறது என இயக்குனர் விஷ்ணு எடவனிடம் நயன்தாரா கேட்டிருக்கிறார். அதற்கு இதுபோல் விஷயம் என அவர் சொல்லியிருக்கிறார். உடனே அங்கிருந்து எழுந்து வந்த நயன்தாரா, நேராக கவினிடம் சென்று, ‘‘இதற்கு முன் எந்த பெண்ணையும் கட்டி அணைக்கவே இல்லையா?’’ என கலாய்க்கும் விதமாக கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்தவர்கள் சிரிக்க, கவின் வெட்கப்பட்டு இருக்கிறார். பின் நயன்தாரா சகஜமாக பேசி, கவினுக்கு ஊக்கம் தந்தாராம். அதன் பிறகே அவர் அந்த காட்சியில் நடித்து முடித்திருக்கிறார்.
