சென்னை: ‘அந்தகன்’ படத்துக்கு பிறகு மீண்டும் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் படம், ‘ரஞ்ஜன்: தி அட்வகேட்’. நேற்று பிரசாந்தின் 53வது பிறந்தநாள் விழாவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. விஷால், வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.கே.செல்வமணி, கே.எஸ்.ரவிகுமார், சரண், ஜி.வி.பிரகாஷ் குமார், தேவயானி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், கிரண், முத்துக்காளை, ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் உள்பட பலர் பிரசாந்தை நேரில் வாழ்த்தினர். தெலுங்கில் வெளியான ‘கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் எ நோபடி’ என்ற படத்தின் ரீமேக் இது. 5 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம், 58 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
இதில் ரஞ்ஜன் என்ற வழக்கறிஞராக பிரசாந்த் நடிக்கிறார்.
முக்கிய வேடங்களில் தேவயானி, ஆர்.கே.சுரேஷ், விஜயகுமார், முத்துக்காளை, ஆதிரா, செம்மலர் அன்னம் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். தேவயானியின் இளைய மகள் பிரியங்கா ராஜகுமாரன், தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் எஸ்.கதிரேசனின் மகன் ஹரி அறிமுகமாகின்றனர். படம் குறித்து பிரசாந்த் கூறுகையில், ‘மீண்டும் எனது தந்தையின் இயக்கத்தில் நடிக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் கண்டிப்பானவர். தான் நினைத்த காட்சியை படமாக்காமல் விட மாட்டார். எனது திரையுலக வளர்ச்சிக்கு அவர்தான் முக்கிய காரணம்’ என்றார்.
