மும்பை: ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் நடித்துள்ள ‘துரந்தர் 2’ படம், ரூ.1000 கோடி வசூலை குவித்துவிட்டது. ஆனால் இதில் ஒரு கேரக்டரில் நடித்த நிஜ ஆட்டோ டிரைவர் படத்தை பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார். அந்த படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் வந்த பத்ருல் இஸ்லாம் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது. அவர் ஒரு ஆட்டோ டிரைவர். பத்ருல் இஸ்லாமோ இன்னும் துரந்தர் 2 படம் பார்க்கவில்லை. அவர் கூறும்போது, ‘‘படம் பார்க்க தியேட்டருக்கு சென்றால் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 என்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் 5 பேர் இருக்கிறோம். தலைக்கு 500 ரூபாய் என்றால் 5 பேருக்கு டிக்கெட்டுக்கு மட்டும் ரூ.2 ஆயிரத்து 500 செலவு செய்ய வேண்டும்.
அதுபோக, ஸ்நாக்ஸ் வாங்க, ரூ.2 ஆயிரம் ஒதுக்க வேண்டும். நான் ஆட்டோ ஓட்டி ஒரு மாதத்தில் செலவு எல்லாம் போக கையில் இருக்கும் பணமே ரூ.2,500 தான். அதை பட டிக்கெட்டுக்காக செலவு செய்ய முடியாது. படம் தற்போது தான் ரிலீஸானது என்பதால் டிக்கெட் விலை அதிகமாக இருக்கிறது. நான் பின்னர் படம் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார் பத்ருல் இஸ்லாம். இந்த ஏழை ஆட்டோ டிரைவர் தன் குடும்பத்துடன் துரந்தர் 2 படம் பார்க்க ரன்வீர் சிங் மற்றும் இயக்குநர் ஆதித்யா தார் ஆகியோர் உதவி செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்திய சினிமா வரலாற்றில் வசூலில் புதுப்புது சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தை அதுவும் அதில் நடித்தவரே பார்க்க காசு இல்லாமல் இருப்பது வேதனையான விஷயம் என நெட்டிசன்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
