நீ ஃபாரெவர் விமர்சனம்

புதிய டேட்டிங் செயலி ஒன்றை உருவாக்குகிறார், சுதர்சன் கோவிந்த். தயாரிப்பாளரிடம் காதல் கதையை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார், இயக்குனராக அறிமுகமாகும் அர்ச்சனா ரவி. இதனால், சுதர்சன் கோவிந்த் ஒருவரை காதலிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதே மனநிலையில் அர்ச்சனா ரவியும் இருக்க, இருவரும் சந்தித்து நட்பாகி காதலிக்கின்றனர். அவர்களுக்கு தெரியும், தங்கள் தொழில் சார்ந்த விஷயத்துக்காகவே ஒருவரை ஒருவர் ஏமாற்றி பழகுகிறோம் என்ற ரகசியம்.

இந்நிலையில், சுதர்சன் கோவிந்த் குடும்பத்தினர் அர்ச்சனா ரவியை மருமகளாக ஏற்றுக்கொள்ள முன்வர, பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. நவீன காதலை மைய​மாக வைத்து அசோக்​கு​மார் கலை​வாணி எழுதி இயக்​கி​யுள்ளார். காட்சி அனுபவத்தை குறைத்து, வசனங்கள் மூலமே அனைத்தையும் கடத்த முயற்சித்தது சோர்வடைய வைக்கிறது. ஆனால், உண்மையான காதலை யாராலும் பிரிக்க முடியாது என்பதை வலியுறுத்துகிறார்.

சுதர்சன் கோவிந்த், அர்ச்​சனா ரவி ஜோடியின் லவ் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. பழமையில் ஊறிய தாத்தா கேரக்டரில் ஒய்.ஜி.மகேந்​திரனும், அவரது மருமகனாக நிழல்​கள் ரவியும் அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். எம்​.ஜே.ராம், சினேகா சக்தி, ரித்திகா சீனி​வாஸ், டாக்டர் வித்யா, செல்லா, பிருந்தா, பிரதோஷ் ஆகியோரும் நன்கு நடித்து கவனத்தை ஈர்த்​துள்​ளனர்.

பொள்ளாச்சியையும், சென்னையையும் கண்முன் கொண்டு வந்துள்ளது, ராஜா பட்​டாச்​சார்ஜியின் ஒளிப்​ப​திவு. பாடல்களிலும், பின்னணி இசையிலும் யார் என்று கேட்க வைத்துள்ளார், அஸ்​வின் ஹேமந்த். ரொமான்ஸ் காமெடி டிராமா ஜானரில் பல படங்கள் வந்துவிட்டது. இப்படத்தில், நவீன டேட்டிங் ஆஃப் மூலம் இணைந்த ஜோடியின் பிரச்னைகளை அசோக்குமார் கலைவாணி அலசியுள்ளார். காட்சிகளை புதிதாக யோசித்திருக்கலாம்.

Related Stories: