நீளிரா படத்தில் நடித்ததை ஆசீர்வாதமாக நினைக்கிறேன்: ரூபா கொடுவாயூர்

சென்னை: நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா குகராஜா, சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா நடித்துள்ள படம், ‘நீளிரா’. இலங்கையை சேர்ந்த சோமீதரன் எழுதி இயக்கியுள்ளார். யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம், வரும் 3ம் தேதி திரைக்கு வருகிறது. செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்ய, கே இசை அமைத்துள்ளார்.

1988ல் வட இலங்கையில் நடக்கும் போர் சூழலில், ஒரு வீட்டின் திருமண நிகழ்ச்சி எப்படி நடக்கிறது? அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை, உண்மைச் சம்பவ அடிப்படையில் கற்பனை கலந்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருநாள் இரவில் கதை நடக்கிறது. தெலுங்கில் அறிமுகமாகி, ‘எமகாதகி’ மூலம் தமிழுக்கு வந்தவர் ரூபா கொடுவாயூர். அவர் கூறுகையில், ‘தமிழ் மக்களுக்கு ‘நீளிரா’ படம் ரொம்ப ஸ்பெஷலானது.

போர் நடக்கும் பகுதிகளில் ஆயுதங்கள் இருக்கும், துப்பாக்கிகள் இருக்கும், போராட்டம் இருக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால், அதற்குள் மக்கள் இருப்பார்கள், அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள் என்பதை பற்றி பேசும் இப்படம், ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ‘எமகாதகி’ படத்தை விட இதில் நான் சிறப்பாக நடித்துள்ளேன். இதை எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக நினைக்கிறேன்’ என்றார்.

Related Stories: