முத்தையாபுரம் கருப்பசாமி கோயில் திருவிழா; அரிவாள் மீது நின்று சாமியாடி அருள்வாக்கு: பக்தர்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்

ஸ்பிக்நகர்: முத்தையாபுரம் மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில் திருவிழாவில் சுவாமிக்கு மதுபானம் காணிக்கையாக படைக்கப்பட்டது. மது அருந்திவிட்டு அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் தோப்புத் தெருவில் ஆண்டுதோறும் 24 மணி நேரம் பூமி தவபூஜையில் அமர்ந்து பின்னர் அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கோயில் கொடைவிழா மட்டும் நடந்தது. இதையொட்டி மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழா, கடந்த 6ம் தேதி காலை 8 மணிக்கு கால்நாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  தொடர்ந்து தினமும் கருப்பசாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. 12ம் தேதி அதிகாலை 3 மணிக்கு யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 13ம் தேதி தீர்த்தக்கரை செல்லுதல் நிகழ்ச்சியும், பின்னர் சாமியாடி மது அருந்தியபடி அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சாமி வேட்டைக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை பக்தர்கள் கருப்பசாமிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு மதுபானத்தை காணிக்கையாக பக்தர்கள் வழங்கினர். மதுபானம், கள் அருந்திய சாமியாடி முருகன் அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். அவரிடம் பக்தர்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து அவர் அருள்வாக்கு கூறுகையில், கொரோனா காலக்கட்டத்தில் உலகத்தில் பல உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது. இனிவரும் நாட்களில் உலக மக்கள் அனைவரையும் நோய் நொடியில் இருந்து காப்பேன், என்றார். விழாவில் கோயில் நிர்வாக தலைவர் சேகர், திருவேங்கடம் சக்திவேல், நடுவக்குறிச்சி சின்ன முனியசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுடலைமணி, சுரேஷ், மாதவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்….

The post முத்தையாபுரம் கருப்பசாமி கோயில் திருவிழா; அரிவாள் மீது நின்று சாமியாடி அருள்வாக்கு: பக்தர்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: