விமர்சனம்: Couple Friendly

இன்டீரியர் டெக்கரேஷன் துறையில் சாதிப்பதற்காக சென்னைக்கு வரும் சந்தோஷ் சோபன், எதிர்பார்த்த வேலை கிடைக்காததால் பார்ட் டைமாக வாடகைக்கு பைக் ஓட்டுகிறார். ஐடி துறையில் சாதிப்பதற்காக சென்னையில் வேலை தேடும் மானசா வாரணாசி, எதிர்பார்த்த பணி அமையாதால் விரக்தி அடைகிறார். இந்நிலையில் அவர்கள் காதலிக்கின்றனர். அப்போது திடீரென்று ஏற்படும் பிரச்னை அவர்கள் வாழ்க்கையை திசை மாற்றுகிறது. அது என்ன என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.

மிகவும் மென்மையான, அதேவேளையில் அழுத்தமான காதல் கதைக்கு சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி பொருத்தமான தேர்வு. இருவரும் உணர்வுப்பூர்வமான நடிப்பின் மூலம் மனதில் ஆழமாக பதிகின்றனர். யோகி பாபுவின் டைமிங் காமெடி சிரிக்க வைக்கிறது. சுனில் ரெட்டி உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.

தினேஷ் புருஷோத்தமன் இயல்பான ஒளிப்பதிவின் மூலம் தனி முத்திரை பதித்துள்ளார். ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை அழுத்தமாக இருக்கிறது. எழுதி இயக்கியுள்ள அஸ்வின் சந்திரசேகர், நிஜ காதல் என்பது ஒருவரது கனவை இன்னொருவர் நனவாக்க உதவுவது என்பதை ஆர்ப்பாட்டமின்றி சொல்லியிருக்கிறார். உண்மையான காதலர்கள் பார்க்க வேண்டிய படத்தில், வழக்கமான சாதி மோதல் ஒரு திருஷ்டி பொட்டு.

Related Stories: