உண்மையான காதலை உணர்ந்த நயன்தாரா

நயன்தாராவை காதல் திருமணம் செய்தவர், இயக்குனர் விக்னேஷ் சிவன். இத்தம்பதிக்கு உயிர், உலக் ஆகிய இரட்டைப்பிறவி மகன்கள் இருக்கின்றனர். இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் நயன்தாரா, தமிழில் ‘மூக்குத்தி அம்மன் 2’, ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’, ‘ஹாய்’, ‘ராக்காயி’ ஆகிய படங்களிலும் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன், கிரித்தி ஷெட்டி நடித்த ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி முடித்துள்ளார். நேற்று காதலர் தினத்தையொட்டி நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்கள் போட்டோவை வெளியிட்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். நயன்தாரா வெளியிட்டுள்ள பதிவில், ‘காதலை பிடித்துக்கொண்டால் வாழ்க்கை முழுவதும் நிறைவாக இருக்கும். நமக்கான ஆன்மாக்களை நாம் சந்திப்பதற்கு முன்பாகவே அவை நம் விதியில் எழுதப்படுகின்றன.

உன்னுடன் 10 வருடங்கள் கடந்துள்ளது. ஆனாலும், நீ இல்லாமல் ஒருநாள் கூட என்னால் இருக்க முடியவில்லை. நீ என் அமைதியான பலம். என் நிலையான நிலம். மனித உருவில் என் வீடு. எனக்கு அன்பு, பொறுமை, நம்பிக்கை, கருணை ஆகியவற்றை கற்பிக்கும் நோக்கத்துடன், கடவுள் உன்னை என் வாழ்க்கையில் இணைத்துள்ளார். உன்னிடம் இருந்தபோதுதான் உண்மையான காதல் மென்மையானது, நிலையானது, துணிச்சலானது என்பதை கற்றுக்கொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், ‘கைகளை திறந்தால் எதுவும் இருக்காது. மனதுக்குள் பார்த்தால், ஒரு உண்மையான காதல் இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் நம்மை அன்பாக உணர வைக்கும் அந்த நபர் இருந்தால் போதும், அப்போது நாம் அரசர்களை விட பணக்காரர்கள். தேவதைகளால் ஆசீர்வதிக்கப்பட்டவர், இந்த பிரபஞ்சத்தால் முத்தமிடப்பட்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: