விவசாயிகளுக்கு உழவர் விருது கார்த்தி வழங்கினார்

சென்னை: நடிகர் கார்த்தி நடத்தி வரும் உழவன் அறக்கட்டளை சார்பாக ஆண்டுதோறும் உழவர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக 7வது ஆண்டுக்கான உழவர் விருதுகள் 2026கான விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் என திரையுலக பிரமுகர்களும் வேளாண் செயற்பாட்டாளர்கள், வேளாண் வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இதில் சிறந்த விவசாயி விருது கோவில்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள், சிறந்த வேளாண் பங்களிப்பு விருது மதுரையைச் சேர்ந்த பாமயன், சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது வேலூர் மக்கள் நலச்சந்தை, நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு விருது குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.

கார்த்தி பேசும்போது, “நமக்காக இரவு பகலாக உழைத்து உணவை அளிக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களை முறையாக அங்கீகரிப்பதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், அவர்களுடைய உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயிகளுக்காகவும், விவசாயத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாட வேண்டும்; இந்த சமூகத்திற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து இந்த ‘உழவர் விருதுகளை’ வழங்கி வருகிறோம். நம் அன்றாட வாழ்வில் விவசாயம் பற்றிய உரையாடல்கள் தொடர்ந்து நடந்தால்தான் ஒரு நல்ல மாற்றம் உருவாகும்’’ என்றார்.

Related Stories: