சென்னை: ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ ஆகிய படங்களை தொடர்ந்து சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியுள்ள படம், ‘கெணத்த காணோம்’. இப்படத்தின் ஷூட்டிங்கில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சுரேஷ் சங்கையா மரணம் அடைந்தார். கதையின் நாயகனாக யோகி பாபு நடித்துள்ளார். மற்றும் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரெய்ச்சல் ரெபேக்கா, ஜார்ஜ் மரியன் நடித்துள்ளனர். வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
மார்ச் 13ம் தேதி தியேட்டர்களில் திரைக்கு வரும் இப்படம் குறித்த நிகழ்ச்சியில் யோகி பாபு பேசியதாவது: இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் பேசியபோது, நிறைய உதவி இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்க சொன்னார். நிறைய கொடுத்துக் கொண்டிருக்கிறேன். சுரேஷ் சங்கையாவிடம் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் ஐந்து பேர் என்னிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். ராம் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்து வந்தவன் நான். அந்த கஷ்டம் என்ன என்று தெரியும்.
இங்கு வருவதற்கு முன்பு 3 பேரிடம் கதை கேட்டுவிட்டு வந்தேன். சுரேஷ் சங்கையாவை பொறுத்தவரை அவர் எங்கேயும் போகவில்லை, நம்முடன்தான் இருக்கிறார். மகள் பிறந்த பிறகுதான் அவர் காலமானார். அந்த குழந்தைக்கு எனது பங்களிப்பாக, இந்த மேடையிலேயே ஒரு உதவியை செய்கிறேன். இவ்வாறு பேசிவிட்டு, சுரேஷ் சங்கையாவின் மனைவியிடம் யோகிபாபு காசோலையை வழங்கினார். இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க, ஆர்.ரமேஷ்பாபு, ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்துள்ளனர்.
