பங்களாவை நினைத்து உருகிய அமிதாப்

இந்திய திரையுலகின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன், தனது மும்பை பங்களா குறித்து மிகவும் பெருமையாக பேசியிருக்கிறார். அதோடு, அந்த பங்களா கோடிக்கணக்கான ரசிகர்களால் ஆசீர்வதிக்கப்பட்டது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். மும்பை ஜுஹு பகுதியிலுள்ள ஜல்சா பங்களாவில் அமிதாப் பச்சன் தனது குடும்பத்தினருடன் நீண்ட காலமாக வசித்து வருகிறார். இந்த பங்களா அவருக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான தொடர்புள்ளது. அவரை பார்க்க ஒவ்வொரு ஞாயிறன்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வந்து செல்வது வழக்கம்.

அவர்கள் பங்களாவுக்கு வெளியே பல மணி நேரம் காத்திருந்து அமிதாப் பச்சனை பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் செல்வார்கள். அமிதாப் பச்சனும் தனது ரசிகர்களை ஏமாற்றாமல் ஒவ்வொரு வாரமும் சந்திப்பது வழக்கம். இது பல ஆண்டுகளாக நடந்து வரும் சம்பவம் என்பதால், இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மிகவும் அபூர்வமாகவே அமிதாப் பச்சன் ரசிகர்களை சந்திக்காமல் இருப்பார். தான் வசித்து வரும் ஜல்சா பங்களா குறித்தும், ரசிகர்களை சந்திப்பது குறித்தும் அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘நாங்கள் வசிக்கும் ஜல்சா பங்களா என்பது, முழு அன்பின் அடையாளமாகும். ஒவ்வொரு வாரமும் வரும் எனது ரசிகர்கள், எனது குடும்பத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. உங்களின் பிசியான வாழ்க்கையில் இருந்து எனக்காக ஒதுக்கும் அந்த சில நிமிடங்களும், நீங்கள் காட்டும் அன்பும், வழங்கும் ஆசீர்வாதங்களும் எனக்கு ஒரு கடவுள் வருகையை போன்ற உணர்வை ெகாடுக்கின்றன. மக்கள் தங்கள் வேலைகளுக்கு இடையே நேரத்தை ஒதுக்கிக்கொண்டு வந்து என்னை சந்திப்பதை மிகப்பெரிய ஆசீர்வாதமாக நினைக்கிறேன்.

‘ஜல்சா’ பங்களா, வெறும் பங்களா மட்டுமல்ல. அது லட்சக்கணக்கான மக்களின் ஆசீர்வாதங்களை பெற்ற தலம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குடும்பத்துக்கு நிழல் தரும் ஒரு மரம். எனது பிள்ளைகள் பிறந்தபோதும், அவர்களின் திருமணத்தின் போதும் இந்த இல்லம் அவர்களை ஆசீர்வதித்துள்ளது. பிள்ளைகள் இங்கே வளர்ந்தார்கள். இப்போது அவர்களின் பிள்ளைகளும் (பேரன், பேத்திகள்) இங்கே வளர்ந்து வருகிறார்கள். எனது குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை சுமந்து நிற்கும் இந்த பங்களாவை ஒரு கட்டிடமாக பார்க்காமல், மக்களின் அன்பால் நிறைந்த ஒரு புனித இடமாக கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: